போர்களால் தெற்கு நாடுகளில் உணவு, எரிபொருள், உரம் ஆகியவற்றிற்கு தட்டுப்பாடு ஏற்படும் சூழல் உருவாகியுள்ளதாக ஜி-20 உச்சி மாநாட்டில் பிரதமர் மோடி கவலை தெரிவித்தார்.
பிரேசில் நாட்டின் டியோ டி ஜெனிரோ நகரில் ஜி-20 உச்சி மாநாடு நேற்று தொடங்கியது. சமூக உள்ளடக்கம் மற்றும் பட்டினி, வறுமைக்கு எதிரான போராட்டம் என்ற தலைப்பில் ஜி-20 உச்சி மாநாடு நடைபெற்று வருகிறது.
இதில் கலந்து கொண்டு பேசிய பிரதமர் மோடி, உலகில் நடந்து வரும் போர்களால் தெற்கு நாடுகள் மோசமாக பாதிக்கப்பட்டுள்ளதாகக் கூறினார். தெற்கு நாடுகளில் உணவு, எரிபொருள், உரம் ஆகியவற்றிற்கு தட்டுப்பாடு ஏற்படும் சூழல் உருவாகியுள்ளதாகவும் அவர் கவலையுடன் குறிப்பிட்டார்.
தெற்கு நாடுகளுக்கு முன்னுரிமை மற்றும் அந்நாடுகள் சந்திக்கும் சவால்களை மனதில் வைத்து செயல்பட்டால் மட்டுமே நமது ஆலோசனைகள் வெற்றி பெறும் என்றும் பிரதமர் மோடி தெரிவித்தார்.
பசி மற்றும் வறுமைக்கு எதிரான உலகளாவிய கூட்டணிக்காக பிரேசிலின் முயற்சியை பாராட்டுவதாகவும் பிரதமர் மோடி குறிப்பிட்டார். கடந்த 10 ஆண்டுகளில் 25 கோடி மக்களை வறுமையிலிருந்து மீட்டெடுத்தது உட்பட பாஜக அரசின் பல்வேறு முயற்சிகளையும் பிரதமர் மோடி பட்டியலிட்டார்.