உயர்க்கல்வி பயிலும் மாணவர்களுக்கு கல்விக்கடன் வழங்க வகைசெய்யும் பிரதமரின் வித்யாலக்ஷ்மி திட்டம் வரும் பிப்ரவரிக்குள் நடைமுறைப்படுத்தப்படும் என மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் தெரிவித்துள்ளார்.
நாட்டின் தலைசிறந்த 860 உயர் கல்வி நிறுவனங்களில் சேரும் தகுதிவாய்ந்த மாணவர்களுக்கு கல்விக்கடன் வழங்க வகை செய்யும் பிரதமரின் வித்யாலக்ஷ்மி திட்டத்துக்கு மத்திய அமைச்சரவை அண்மையில் ஒப்புதல் அளித்தது.
இந்தத் திட்டத்தின்கீழ் ஆண்டுக்கு 22 லட்சம் மாணவர்கள் பயனடைவர் என மத்திய அரசு தெரிவித்திருந்தது. இந்தத் திட்டம் அமல்படுத்தப்படுவது தொடர்பாக மக்களவையில் கேட்கப்பட்ட கேள்விக்கு நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் பதிலளித்தார்.
அப்போது வரும் பிப்ரவரிக்குள் பிரதமரின் வித்யாலக்ஷ்மி திட்டம் அமலுக்கு வரும் என அவர் தெரிவித்தார். ஆண்டுக்கு 8 லட்ச ரூபாய் குடும்ப வருமானம் கொண்ட மாணவர்களுக்கு 10 லட்சம் ரூபாய் வரை மூன்று சதவீத வட்டி மானியத்தில் கடன் வழங்க வித்யாலக்ஷ்மி திட்டம் வழிவகை செய்வது குறிப்பிடதக்கது.