சென்னை அசோக் நகரில் தெலுங்கு மக்கள் சார்பில் நடைபெற்ற நிகழ்ச்சியில் பங்கேற்க சென்ற நடிகை கஸ்தூரிக்கு காவல்துறையினர் அனுமதி மறுத்தனர்.
கடந்த சில நாட்களுக்கு முன்பு தெலுங்கு பேசும் மக்களை, நடிகை கஸ்தூரி அவதூறாக பேசியதாக கூறி கைது செய்யப்பட்டு பின்னர் ஜாமினில் விடுவிக்கப்பட்டார்.
இந்நிலையில் அசோக் நகர் காசி டாக்கிஸ் திரையரங்கில், தமிழ்நாடு தெலுங்கு பீபுள் சொசைட்டி சார்பில் நடைபெற இருந்த நிகழ்ச்சியில் சிறப்பு விருந்தினராக கலந்து கொள்வதற்காக கஸ்தூரி வருகை தந்திருந்தார்.
அப்போது கடைசி நேரத்தில் நடிகை கஸ்தூரி நிகழ்ச்சியில் கலந்து கொள்ள காவல்துறையினர் அனுமதி மறுத்தனர். இதுகுறித்து விளக்கம் கேட்பதற்காக நடிகை கஸ்தூரி வடபழனி காவல் உதவி ஆணையர் அலுவலகத்துக்கு வருகை தந்தார்.
அப்போது செய்தியாளர்களை சந்தித்த கஸ்தூரி, நேர்மறையான நிகழ்ச்சியில் பங்கேற்க தடை ஏற்படுவது மிகவும் வருத்தமாக உள்ளது என கூறினார். இதனால் தான் தெலுங்கு பேசும் மக்களிடம் இருந்து அந்நியப்படுத்தப்பட்டுள்ளது போல தோன்றி மன உளைச்சல் ஏற்படுவதாகவும் அவர் வேதனை தெரிவித்தார்.