ககன்யான் திட்டத்தில் வீரர்கள் அமரும் பகுதியை, கடலில் மீட்கும் பரிசோதனை 2-வது முறையாக வெற்றிகரமாக நடைபெற்றது.
விண்ணுக்கு வீரர்களை அனுப்பும் ககன்யான் திட்ட பணிகளை இஸ்ரோ தீவிரமாக மேற்கொண்டுள்ளது. இந்த திட்டத்தின்படி, விண்கலத்தில் 3 விண்வெளி வீரர்கள் ராக்கெட் மூலம் விண்ணுக்கு அனுப்பப்படுவர்.
அந்த விண்கலம் 400 கிலோ மீட்டர் தொலைவில் உள்ள சுற்று வட்டபாதையில் 3 நாள் சுற்றிய பின்னர், விண்வெளி வீரர்களுடன் பூமிக்கு திரும்பி, கடலில் விழும்படி வடிவமைக்கப்பட்டுள்ளது. அவ்வாறு, கடலில் விழுந்த அந்த விண்கலத்தை கடற்படையினர் மீட்டு அதிலிருந்து விண்வெளி வீரர்களை வெளியேறச் செய்வார்கள்.
இது தொடர்பான சோதனையை இஸ்ரோ விஞ்ஞானிகள், இந்திய கடற்படையினர் இணைந்து வெற்றிகரமாக நடத்தியுள்ளனர். விசாகப்பட்டினத்தில் உள்ள வங்க கடலில் ராட்சத கிரேன் மூலம் செலுத்தி வெற்றிகரமாக சோதித்துள்ளனர்.