ராஜஸ்தானில் ஆழ்துளை கிணற்றில் தவறி விழுந்த ஐந்து வயது சிறுவனை 55 மணிநேர போராட்டத்துக்குப் பின் மீட்பு குழுவினர் மீட்ட நிலையில், சிறுவன் மருத்துவமனையில் உயிரிழந்தான்.
ராஜஸ்தான் மாநிலம் டாவ்சா மாவட்டம் காளிகாட் கிராமத்தில் விவசாய நிலத்தில் விளையாடிக் கொண்டிருந்த ஐந்து வயது சிறுவன், அங்கிருந்த 150 அடி ஆழமுள்ள ஆழ்துளைக் கிணற்றில் தவறிவிழுந்தான்.
ராட்சத இயந்திரத்தைக் கொண்டு ஆழ்துளைக் கிணற்றின் அருகே மற்றொரு பள்ளம் தோண்டி சிறுவனை மீட்கும் பணி தீவிரமாக நடைபெற்றது. குழாய் வழியாக ஆக்சிஜனும் விநியோகிக்கப்பட்டது.
ஏறத்தாழ 55 மணிநேர போராட்டத்துக்குப் பின் சிறுவனை மீட்புக் குழுவினர் மயங்கிய நிலையில் மீட்டனர். பின்னர், மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட சிறுவன், சிகிச்சை பலனின்றி உயிரிழந்தான்.