கடந்த வாரம் நியூயார்க்கில் சுட்டுக்கொல்லப்பட்ட யுனைடெட் ஹெல்த்கேரின் காப்பீட்டுப் பிரிவு CEO பிரையன் தாம்சன் படுகொலையில், ( Luigi Mangione ) லூய்கி மங்கியோ என்ற இளைஞரை காவல்துறையினர் கைது செய்துள்ளனர். யார் இந்த ( Luigi Mangione ) லூய்கி மங்கியோ? எதற்காக பிரையன் தாம்சன் மீது துப்பாக்கி சூடு நடத்தினார்? என்பது பற்றிய ஒரு செய்தி தொகுப்பு.
யுனைடெட் ஹெல்த்கேரின் காப்பீட்டுப் பிரிவு CEO பிரையன் தாம்சன் சுட்டுக் கொல்லப்பட்டது அமெரிக்காவையே அதிர்ச்சிக்குள்ளாக்கியது. இந்தப் படுகொலை, சுமார் ஒரு டிரில்லியன் டாலர் தொழில்துறைக்கு பெரும் பின்னடைவாக பார்க்கப்படுகிறது.
இந்த கொலையை செய்ததாக, 26 வயதான லூய்கி மங்கியோவை , பென்சில்வேனியாவின் அல்டூனாவில் உள்ள மெக்டொனால்ட் உணவகத்தில் காவல் துறையினர் கைது செய்தனர். அவரிடமிருந்து, துப்பாக்கி, தோட்டாக்கள், பல போலி அடையாள அட்டைகள் மற்றும் பணம் கைப்பற்றப்பட்டுள்ளது.
மேலும்,கார்ப்பரேட் அமெரிக்காவை குற்றம் சொல்லும் ஒரு ஆவணமும், லூய்கி மங்கியோனிடம் இருந்ததாக தகவல்கள் தெரிவிக்கின்றன. உலகிலேயே மிகவும் விலையுயர்ந்த சுகாதாரப் பாதுகாப்பு முறைக்கு எதிரான குறைகளைத் தம் கையால் லூய்கி மங்கியோ எழுதிய அறிக்கை அது.
கைது செய்யப்பட்ட லூய்கி மங்கியோ அமெரிக்காவின் பிரபல பால்டிமோர் ரியல் எஸ்டேட் அதிபரான மறைந்த நிக்கோலஸ் மங்கியோனின் பேரன் ஆவார்.
Nicholas Mangiano, Turf Valley Resort, Hayfields Country Club, & WCBM-AM வானொலி நிலையம் உள்ளிட்ட ரியல் எஸ்டேட் பேரரசை உருவாக்கினார். நிக்கோலஸ் லோரியன் ஹெல்த் சர்வீசஸ் முதியோர் இல்லங்களையும் நிறுவினார்.மேரிலாந்தில் உள்ள CHAIN OF NURSING HOMES லோரியன் ஹெல்த் சிஸ்டம்ஸ் மங்கியோன் குடும்பத்திற்கு சொந்தமானதாகும்.
பால்டிமோர் சட்டமன்ற பிரதிநிதி நினோ மங்கியோனின் உறவினரான லூய்கி மங்கியோவுக்கு , ஹோவர்டில் உள்ள (Turf Valley Resort ) டர்ஃப் வேலி ரிசார்ட் மற்றும் பால்டிமோரில் உள்ள ( Hayfields Country Club)ஹேஃபீல்ட்ஸ் கன்ட்ரி கிளப் ஆகியவை சொந்தமானதாகும். இவை இரண்டும் நிக்கோலஸ் மங்கியோவால் மங்கியோ எண்டர்பிரைசஸ் மூலம் வாங்கப்பட்டதாகும்.
சொல்லப் போனால், கொலையான யுனைடெட் ஹெல்த்கேரின் காப்பீட்டுப் பிரிவு CEO பிரையன் தாம்சனை விட பெரும் பணக்காரர் லூய்கி மங்கியோ என்று தெரியவருகிறது.
பென்சில்வேனியா பல்கலைக்கழகத்தில் கணினி அறிவியலில் முதுகலைப் பட்டம் பெற்றவரான லூய்கி மங்கியோ, நாள்பட்ட முதுகுவலியால் அவதிப்பட்டு வருவதாகவும், அதற்காக சில மாதங்களுக்கு முன் அறுவை சிகிச்சை செய்து கொண்டதாகவும், அதன் பிறகு தமது குடும்பத்தினருடனும் நண்பர்களுடனும் தொடர்பை துண்டித்து கொண்டதாகவும் தகவல்கள் தெரிவிக்கின்றன.
கடந்த நவம்பர் மாதம்,18 ஆம் தேதி, சான் பிரான்சிஸ்கோவில் இருந்து மகனைக் காணவில்லை என்று மங்கியோ தாயார் புகார் கொடுத்திருந்தார்.
உடல்நலக் காப்பீட்டு நிறுவனங்களின் மீதான வெறுப்பால், யுனைடெட் ஹெல்த்கேரின் காப்பீட்டுப் பிரிவு CEO பிரையன் தாம்சனைச் சுட்டிருக்கலாம் என்றும் சொல்லப் படுகிறது. லூய்கி மங்கியோவின், சொந்த உடல்நல பிரச்னைகள், எந்த அளவுக்கு அமெரிக்க மருத்துவத் துறையைப் பற்றிய வெறுப்பு பார்வையை அவருக்குக் கொடுத்தன என்பது பற்றி சட்ட அமலாக்கத்துறையினர் விசாரணை நடத்தி வருகின்றனர்.
மேலும்,மங்கியோ தனது முதுகுவலி, அறிவாற்றால் செயல்பாடு பாதிப்பு மற்றும் சியாட்டிகா உள்ளிட்ட உடல்நலப் பிரச்னைகளை குறித்து ஆன்லைனில் தொடர்ந்து பதிவிட்டு வந்ததாக தெரியவந்துள்ளது.
இதற்கிடையே, அமெரிக்காவின் உடல்நலக் காப்பீட்டில், மருத்துவர்களால் பரிந்துரை செய்யப்பட்ட மருந்துக்களுக்கான காப்பீடு மறுக்கப் படுகிறது என்ற குற்றச்சாட்டுக்களும் வழக்குகளும் அதிகரித்து வருகின்றன.
அமெரிக்காவின் சுகாதார துறை மற்றும் காப்பீட்டு துறை, மீதான சராசரி மக்களின் கோபத்தையே யுனைடெட் ஹெல்த்கேரின் காப்பீட்டுப் பிரிவு CEO பிரையன் தாம்சன் படுகொலை வெளிக்காட்டுகிறது…..