OpenAI நிறுவனத்தின் முன்னாள் ஊழியரான இந்திய வம்சாவளியைச் சேர்ந்த இளைஞர் சுசீர் பாலாஜி, சடலமாக கண்டெடுக்கப்பட்டுள்ளார். OpenAIக்கு எதிராக வழக்கு தொடரப்பட்ட நிலையில் அவர் மரணமடைந்திருப்பது பல சந்தேகங்களை எழுப்பி உள்ளது. யார் இந்த சுசீர் பாலாஜி ? அவர் மர்மமான முறையில் இறந்ததன் பின்னணி என்ன ? விரிவாக பார்க்கலாம்…!
அமெரிக்காவின் கலிபோர்னியா மாநிலத்தில் உள்ள குபெர்டினோ பகுதியில் பிறந்து வளர்ந்த சுசீர் பாலாஜி, பெர்க்லியில் உள்ள கலிபோர்னியா பல்கலைக்கழகத்தில் கணினி அறிவியல் படித்தார்
உலகின் முன்னணி செயற்கை நுண்ணறிவு நிறுவனமான OpenAI-ல் பணியாற்றிய அவர், அங்கிருந்து பின்னர் வெளியேறினார். இந்நிலையில்தான் கடந்த மாதம் தனது சான் பிரான்சிசோ வீட்டில் சுசீர் பாலாஜி மர்மமான முறையில் இறந்து கிடந்தார்.
சுசீர் பாலாஜியின் மரணத்துக்கான காரணம் இன்னும் அதிகாரப் பூர்வமாக வெளியிடப்படவில்லை. அவர்
தற்கொலை செய்துகொண்டதாக கூறும் போலீசார், அவரது மரணத்தில் பெரியளவில் சந்தேகம் எதுவும் இல்லை என தெரிவித்துள்ளனர்.
OpenAI நிறுவனத்தில் பணிபுரிந்த சுசீர் பாலாஜி, OpenAI நிறுவனம் அமெரிக்க காப்புரிமை சட்டத்தை மீறுவதாக கூறியிருந்தார். இது குறித்து நியூயார்க் டைம்ஸ் இதழில் பல கட்டுரைகளையும் எழுதினார். அதில், OpenAI எப்படி எல்லாம் காப்புரிமைகளை மீறுகிறது என்பதையும் விளக்கி இருந்தார்.
அத்துடன் OpenAI-யின் செயல்பாடுகள், ஒட்டுமொத்தமாக இணையச் சுற்றுச்சூழலுக்கு தீங்கு விளைவிக்கும் வகையில் உள்ளன என்றும், தொழில் முனைவோர் மற்றும் வணிகங்களை எதிர்மறையாக பாதிக்கும் என்றும் சுசீர் பாலாஜி எச்சரிக்கை விடுத்திருந்தார். இதனை அடுத்து, கடந்த ஆகஸ்ட் மாதம் OpenAI நிறுவனத்தின் வேலையில் இருந்து அவர் விலகினார்.
அமெரிக்க நீதிமன்றத்தில் நடந்து வரும் OpenAIக்கு எதிரான பல வழக்குகளில் சுசீர் பாலாஜியால் கண்டுபிடிக்கப்பட்ட தகவல்கள் முக்கிய ஆதாரமாக இருக்கும் என்று கூறப்படுகிறது.
இறப்பதற்கு முன்னதாக, ChatGPT உள்ளிட்ட AI மாதிரிகளைப் பயிற்றுவிக்க OpenAI காப்புரிமை பெற்ற உள்ளடக்கத்தைப் பயன்படுத்தியதாக சுசீர் பாலாஜி தனது எக்ஸ் தளத்தில் பதிவிட்டிருந்தார்.
தன் கடைசி பதிவில், தான் 4 ஆண்டுகளாக OpenAI-யில் பணிபுரிந்ததாகவும், கடைசி18 மாதங்கள் ChatGPT ல் பணியில் இருந்ததாகவும் தெரிவித்திருக்கிறார். மேலும் GenAI நிறுவனங்களுக்கு எதிராக தாக்கல் செய்யப்பட்ட அனைத்து வழக்குகளையும் பார்த்த பிறகுதான் உண்மை தெரிந்தது என்று சுசீர் பாலாஜி OpenAI மீது குற்றம் சாட்டி இருந்தார்.
இதனிடையே, சுசீர் பாலாஜியின் மரணச் செய்தியை அறிந்து அதிர்ச்சி அடைந்ததாக OpenAI செய்தி தொடர்பாளர் தெரிவித்துள்ளார். OpenAIக்கு எதிராக நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்ட நிலையில் சுசீர் பாலாஜி மரணமடைந்தது நீங்காத மர்மமாகவே உள்ளது.