நாகையில் வீடுகளைச் சுற்றி 4 நாட்களாக மழைநீர் தேங்கியுள்ளதால் நோய்த்தொற்று ஏற்படும் அபாயம் உள்ளதாக பொதுமக்கள் வேதனை தெரிவித்துள்ளனர்.
நாகை மாவட்டம் காடம்பாடி பகுதிகளில் கடந்த சில நாட்களுக்கு முன்பு கனமழை பெய்தது. இதனால், வீடுகளைச் சுற்றி மழைநீர் தேங்கியுள்ளதால் அப்பகுதியே தீவுபோல் தனித்து விடப்பட்டுள்ளது.
4 நாட்களாக மழைநீர் வடியாத நிலையில், பொதுமக்கள் அத்தியாவசிய தேவைக்கு கூட வெளியே செல்வதற்கு சிரமம் அடைந்து வருகின்றனர். அத்துடன் மழைநீருடன் கழிவுநீரும் கலந்துள்ளதால் துர்நாற்றம் வீசுவதாகவும் நோய்த்தொற்று ஏற்படும் அபாயம் உள்ளதாகவும் கூறப்படுகிறது.
எனவே, உடனடியாக கால்வாய்களை சீரமைத்து மழைநீரை அகற்ற நடவடிக்கை எடுக்க வேண்டும் என அப்பகுதி மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.