தாமிரபரணி ஆற்றில் ஏற்பட்ட வெள்ளப்பெருக்கால் சுமார் 450 ஏக்கரில் பயிரிடப்பட்டிருந்த பயிர்கள் சேதமடைந்துள்ளன.
திருநெல்வேலி மற்றும் தென்காசி மாவட்டங்களில் பெய்த தொடர் கனமழை காரணமாக தாமிரபரணி ஆற்றில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டது. இதனால் ஆற்றையொட்டிய விளை நிலங்களில் வெள்ளநீர் புகுந்து வாழை, நெல், கரும்பு உள்ளிட்ட பயிர்கள் சேதமடைந்தன.
இந்நிலையில் வெள்ள பாதிப்புகள் குறித்த ஆய்வில் அம்பாசமுத்திரம் மற்றும் சேரன்மகாதேவி பகுதிகளில் சுமார் 250 ஏக்கரில் பயிரிடப்பட்டிருந்த வாழை மரங்கள் சேதமடைந்திருப்பது தெரியவந்துள்ளது.
அதேபோல சுமார் 200 ஏக்கரில் பயிரிடப்பட்ட நெல் பயிர்கள் முற்றிலும் அழுகி சேதமடைந்திருப்பது அதிகாரிகளின் முதற்கட்ட ஆய்வில் தெரியவந்துள்ளது. வெள்ள பாதிப்புகள் குறித்த கணக்கெடுப்பு முழுமையாக முடிந்த பின்னர் முழு விவரங்கள் வெளியிடப்படும் என அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.