கோடியக்கரை அருகே மீன்பிடித்து கொண்டிருந்த நாகை மீனவர்கள் மீது இலங்கை கடற்கொள்ளையர்கள் தாக்குதல் நடத்திய சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
நாகை மாவட்டம், வேதாரண்யம் அடுத்த கோடியக்கரையில் இருந்து அக்கரைபேட்டையை சேர்ந்த 3 மீனவர்கள் கடலுக்கு சென்றுள்ளனர். கோடியக்கரைக்கு தென்கிழக்கே மீன்பிடித்துக் கொண்டிருந்தபோது 2 பைபர் படகில் வந்த 6 இலங்கை கடற்கொள்ளையர்கள் 3 மீனவர்களையும் ஆயுதங்களால் தாக்கி, மீன்பிடி உபகரணங்களை பறித்துக் கொண்டு தப்பியோடியுள்ளனர்.
அங்கிருந்து தப்பி வந்த 3 பேரையும் சக மீனவர்கள் மீட்டு வேதாரண்யம் அரசு மருத்துவமனையில் அனுமதித்தனர். இதேபோன்று, பெருமாள்பேட்டை சேர்ந்த 3 மீனவர்களையும் இலங்கை கடற்கொள்ளையர்கள் தாக்கி மீன்பிடி உபகரணங்களை பறித்து சென்றுள்ளனர். அடுத்தடுத்து இலங்கை கடற்கொள்ளையர்களால் தமிழக மீனவர்கள் தாக்கப்படும் சம்பவம் மீனவர்களிடையே அச்சத்தையும் ஏற்படுத்தியுள்ளது.