நெல்லையை போன்று தென்காசியிலும் டன் கணக்கில் பிளாஸ்டிக் மற்றும் மருத்துவ கழிவுகள் கொட்டப்படுவதாக பொதுமக்கள் குற்றஞ்சாட்டி உள்ளனர்.
தென்காசி மாவட்டம் பாவூர்சத்திரம் அருகே உள்ள செல்லதாயார்புரம் பகுதியில் அதிகளவில் விவசாய தோட்டங்கள் உள்ளன. இந்த பகுதிக்கு செல்லும் வழியில், தனி நபருக்கு சொந்தமான இடத்தில் டன் கணக்கில் பிளாஸ்டிக் குப்பை கழிவுகள் கொட்டப்படுவதாக விவசாயிகள் குற்றஞ்சாட்டி உள்ளனர்.
பெத்தநாடார்பட்டி பகுதியில் உள்ள அரசுக்கு சொந்தமான நிலத்தில் குப்பைகள் கொட்டப்பட்டு வரும் நிலையில், இரவு நேரங்களில் கனரக லாரிகள் மூலம் பிளாஸ்டிக் மற்றும் மருத்துவ கழிவுகள் கொட்டப்பட்டு வருவதாக கவலை தெரிவிக்கின்றனர்.
குப்பை கழிவுகளால் துர்நாற்றம் வீசுவதோடு, குப்பைகளை எரிக்கும்போது மூச்சுத் திணறல் ஏற்படுவதாகவும் தெரிவிக்கின்றனர். இதுகுறித்து சம்பந்தப்பட்ட அதிகாரிகளிடம் புகார் அளித்தும் நடவடிக்கை எடுக்கவில்லை என குற்றஞ்சாட்டியுள்ள மக்கள், குப்பை கழிவுகளை அகற்ற அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும் என கோரிக்கை விடுத்துள்ளனர்.