மதுரை அலங்காநல்லூர் அருகே திடக்கழிவு மைய வளாகத்தில் குப்பைகள் குவிந்து கிடப்பதால் தொற்று நோய் பரவும் அபாயம் ஏற்பட்டுள்ளது.
அலங்காநல்லூரில் செயல்பட்டு வரும் திடக்கழிவு மையத்தில் பேரூராட்சியில் இருந்து சேகரிக்கப்படும் குப்பைகள் கொட்டப்படுகின்றன. ஆனால், குப்பைகள் தரம் பிரிக்கப்படாமல் எரிக்கப்படுவதால் சுற்றுவட்டார பகுதிகள் முழுவதும் புகை மண்டலமாக காட்சியளிக்கிறது.
இதனால் விவசாய நிலங்கள் பாதிக்கப்படுவதும் சுவாச கோளாறுகள் ஏற்படுவதாக பொதுமக்கள் குற்றம் சாட்டியுள்ளனர். மேலும், அப்பகுதி முழுவதும் துர்நாற்றம் வீசி வருவதால் தொற்று நோய் பரவும் அபாயம் ஏற்பட்டுள்ளது.
இதனால் குப்பைகளை விரைந்து அப்புறப்படுத்த அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டுமென கிராம மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.