பெண்களின் வீரத்துக்கும், உரிமைகளுக்கும் எடுத்துக்காட்டாக விளங்கியவர் வீரமங்கை ராணி வேலு நாச்சியார் என தமிழக பாஜக மாநில தலைவர் அண்ணாமலை புகழாரம் சூட்டியுள்ளார்.
அவர் விடுத்துள்ள பதிவில் தெரிவித்துள்ளதாவது : “இந்தியாவின் முதல் பெண் சுதந்திரப் போராட்ட வீராங்கனையான, வீரமங்கை ராணி வேலு நாச்சியார் அவர்கள் நினைவு தினம் இன்று. தமது கணவரின் மறைவுக்குப் பிறகு, சிவகங்கைச் சீமை மண்ணைக் காக்க, ஆங்கிலேயர்களுக்கு எதிராகப் போரிட்டு வென்றவர்.
பாரதத்தில், பெண்களின் வீரத்துக்கும், உரிமைகளுக்கும் எடுத்துக்காட்டாக விளங்கியவர். வீரமங்கை ராணி வேலு நாச்சியார் அவர்களது வீரத்தையும் தியாகத்தையும் போற்றி வணங்குகிறோம் என அண்ணாமலை தெரிவித்துள்ளார்.
இதேபோல் அவர் விடுத்துள்ள மற்றொரு பதிவில் தெரிவத்துள்ளதாவது : “சென்னை மாகாண முதல்வராகவும், சுதந்திர இந்தியாவின் முதல் கவர்னர் ஜெனரலாகவும் திறம்படப் பணியாற்றிய பாரத ரத்னா மூதறிஞர் சக்கரவர்த்தி ராஜாகோபாலாச்சாரியார் அவர்கள் நினைவு தினம் இன்று. சுதந்திரப் போராட்டத்தில், உப்பு சத்தியாகிரக போராட்டத்தைத் தமிழகத்தில் முன்னின்று நடத்தியவர். தலைசிறந்த வழக்கறிஞராகவும், எழுத்தாளராகவும் விளங்கியவர்.
உலக அமைதியையும் சமாதானத்தையும் வலியுறுத்தியவர். தீண்டாமை ஒழிப்பையும் ஆலய நுழைவுப் போராட்டத்தையும் முன்னெடுத்த சமூக சீர்திருத்தவாதி. மது ஒழிப்பு, தீண்டாமை ஒழிப்பு, ஆலய நுழைவுப் போராட்டம் என, தமது இறுதிக் காலம் வரை சமூகத்திற்காகவும், மக்களுக்காகவும் சுயநலமின்றி உழைத்த அமரர் ராஜாஜி அவர்கள் புகழைப் போற்றி வணங்குகிறோம்” என அண்ணாமலை கூறியுள்ளார்.