இந்தியாவின் முதல் பெண் விடுதலைப் போராட்ட வீராங்கனையான ராணி வேலு நாச்சியாரின் நினைவு நாளான இன்று, வீர மங்கையின் வெற்றி வரலாற்றைப் பற்றி இந்த செய்தி தொகுப்பில் பார்க்கலாம்.
1730ம் ஆண்டு ராமநாதபுரம் மன்னர் செல்லமுத்து விஜயரகுநாத சேதுபதி, சக்கந்தி முத்தாத்தாள் தம்பதியருக்கு ஒரே பெண் மகளாக பிறந்தார் வேலுநாச்சியார். ஆண் பிள்ளை போலவே வளர்க்கப் பட்ட அவர், சிறுவயதிலேயே குதிரையேற்றம், வில்வித்தை, வாள் வித்தை, வளரி, சிலம்பம் போன்ற பல்வேறு தற்காப்புக் கலைகளில் தீவிரப் பயிற்சி பெற்றார். வியக்கவைக்கும் போர் வீராங்கனையாக வேலு நாச்சியார் திகழ்ந்தார்.
போர் கலைகளில் மட்டுமின்றி அறிவிலும் வேலுநாச்சியார் முதன்மை பெற்றார். ஆங்கிலம், பிரெஞ்சு, உருது உட்பட பன்மொழி புலமை பெற்ற வேலுநாச்சியாருக்குத் 16 வயதில் திருமணம் நடந்தது. சிவகங்கை இளவரசர் முத்து வடுகநாத பெரியவுடைய தேவரை மணந்து ஒரு பெண் குழந்தைக்குத் தாயானார். ராணி வேலு நாச்சியார் முத்து வடுகநாத பெரியவுடைய தேவர் தம்பதியர் 1750ம் ஆண்டு முதல் 1772 ஆம் ஆண்டு வரை வரை இருபதாண்டுகளுக்கும் மேலாக சிவகங்கை சீமையை செம்மையாக ஆட்சி செய்தனர்.
அந்த கால கட்டத்தில், ஆங்கிலேய அரசும், பிரெஞ்சு அரசும் இந்தியாவை கைப்பற்றி ஆட்சி செய்ய திட்டம் வகுத்திருந்தனர். அதற்காக, பல சிற்றரசர்களை மிரட்டி பணிய வைத்தனர். எதிர்த்த சிற்றரசர்களைப் போரில் கொன்று, ஆட்சியைக் கைப் பற்றத் தொடங்கினர். தென்னகத்தில் இருந்த பல நாடுகளைப் பெரும்பாலும் ஆங்கிலேயர் கைப்பற்றிவிட்டனர்.
1772-ஆம் ஆண்டு ஆற்காடு நவாப், ஆங்கிலேயர்களுடன் சேர்ந்துக்கொண்டு சிவகங்கையைத் தாக்கி ‘காளையார் கோவில் போரில்’ ராணி வேலு நாச்சியாரின் கணவரைக் கொன்றார்.
இந்தப் போரின் போது, ராணி வேலு நாச்சியாரும் அவரது மகளும் அருகில் உள்ள கோவிலில் இருந்ததால் உயிர் தப்பினார்கள். வீரத்துடன் கூடவே விசுவாசமும் நிறைந்த மருது சகோதரர்களான பெரிய மருது மற்றும் சின்ன மருது ஆகிய இருவரும் அவர்களைப் பத்திரமாக அங்கிருந்து மீட்டு பாதுகாப்பாக அழைத்துச் சென்றனர். ராணி வேலு நாச்சியாரால் தன் கணவரின் உடலைக் கூட பார்க்க முடியவில்லை என்பது தான் சோகத்திலும் சோகம்.
தனது கணவர் முத்து வடுகநாத பெரியஉடைய தேவர் மற்றும் தங்கள் சமஸ்தானமான சிவகங்கையை இழந்த பின்னர் ராணி வேலு நாச்சியார் தனது இளம் மகள் வெள்ளச்சியுடன் அடைக்கலம் தேடிக் கொண்டிருந்தார்.
காடுகளிலும் கிராமங்களிலும் ஆதரவற்று அலைந்து திரிந்த ராணி வேலு நாச்சியார், சிவகங்கையை ஆங்கிலேயர்களிடம் இருந்து மீட்க, உதவி செய்பவர்களும், பெரும்படையும் தேவை என்பதை உணர்ந்தார்.
மருது சகோதரர்களுடன் இணைந்து படையை உருவாக்கினார் என்றாலும் ஆங்கிலேயர்களை எதிர்கொள்ள அந்தப் படை போதுமானதாக இருக்கவில்லை. மைசூர் மன்னர் ஹைதர் அலிக்கு, ஆங்கிலேயர்களுடனோ ஆற்காடு நவாபுடனோ நல்லுறவு இருக்கவில்லை
சிவகங்கையிலிருந்து 100 கிலோமீட்டர் தொலைவில் உள்ள திண்டுக்கல்லில் ராணி வேலுநாச்சியார் ஹைதர் அலியைச் சந்தித்தார். உருது மொழியில் பேசிய ராணி வேலு நாச்சியாரின் தைரியத்தையும், உறுதியையும் கண்டு ராணி வேலுநாச்சியாருக்கு உதவ ஹைதர் அலி முன்வந்தார். ராணி வேலுநாச்சியாரை திண்டுக்கல் கோட்டையில் தங்கும்படி ஹைதர் அலி கேட்டுக்கொண்டார்.
தனது ராஜ்ஜியத்தை மீட்டெடுக்க வேலுநாச்சியாருக்கு ராணுவ உதவி தேவைப்பட்டது. அதேநேரத்தில், அந்தப் பிராந்தியத்தில் பிரிட்டிஷ் காலனித்துவ சக்திக்கு சவால் விடுவதற்கான வாய்ப்பாக ஹைதர் அலி அதைக் பயன்படுத்திக் கொண்டார்.
ராணி வேலுநாச்சியாருக்குப் பல்வேறு ஆயுதங்களுடன் ராணுவ உதவித்தொகையாக 400 பவுண்டுகள் வழங்கப் பட்டது.
1780ம் ஆண்டு ஐப்பசி மாதம் ஐந்தாம் நாள், ராணி வேலுநாச்சியார் தலைமையில் ஒரு படை திண்டுக்கல்லிலிருந்து சிவகங்கை நோக்கிப் புறப்பட்டது. ஹைதர் அலி, சையத் கர்க்கியின் தலைமையின் கீழ் 5,000 காலாட்படை மற்றும் குதிரைப்படை உட்பட பீரங்கிப்படை ஒன்றையும் அனுப்பி வைத்தார்.
கிழக்கிந்திய கம்பனிகளின் வெடிகுண்டு கிடங்குகள், ராணுவ முகாம்கள், ஆகியவற்றைத் தற்கொலைப் படைகளைக் கொண்டு ராணி வேலுநாச்சியார் தாக்கினார் என்பது வரலாறு. இந்த தற்கொலைப் படைகளில் பெண்களும் இருந்தனர் என்பது குறிப்பிடத் தக்கது.
தனது சிறந்த போர் யுக்திகளால் , ராணி வேலு நாச்சியார் சிவகங்கையை கைப்பற்றினார். சிவகங்கையில் வேலுநாச்சியார், தம்மைக் காட்டிக் கொடுக்காமல் வெள்ளையரால் வெட்டுண்ட உடையாளுக்கு வீரக்கல் ஒன்றை நட்டு, தமது திருமாங்கல்யத்தை முதல் காணிக்கையாகச் செலுத்தி அஞ்சலி செலுத்தினார். இந்தக் கோயில் இன்றும் கொல்லங்குடி வெட்டுடையகாளியம்மன் கோயில் என்று அழைக்கப்படுகிறது.
மேலும், ஆங்கிலேயர்களின் கட்டுப்பாட்டில் இருந்த திருச்சிராப்பள்ளி கோட்டையையும், 1781ம் ஆண்டு கைப்பற்றினார். அடுத்த 10 ஆண்டுகள் சிவகங்கையை ஆண்ட ராணி வேலுநாச்சியார், தனது மகள் வெள்ளச்சியிடம் ஆட்சியை ஒப்படைத்தார்.
1793ம் ஆண்டு, தனது பேத்தியின் மரணத்துக்குப் பிறகு விருப்பாட்சி அரண்மனையிலேயே தங்கி இருந்த ராணி வேலுநாச்சியார், 1796ம் ஆண்டு, டிசம்பர் 25 ஆம் தேதி, இயற்கையாக மரணமடைந்தார். இந்தியாவின் முதல் பெண் விடுதலைப் போராட்ட வீராங்கனை இராணி வேலு நாச்சியாரின் வீரத்தைப் போற்றுவது ஒவ்வொரு இந்தியரின் கடமையாகும்.