ட்ரம்ப்பின் ஹோட்டலுக்கு வெளியே நிகழ்ந்த சம்பவத்திற்கும், நியூஓர்லேன்ஸ் தாக்குதலுக்கும் சம்பந்தம் உள்ளதா என்பது குறித்து உளவுத்துறை விசாரணை நடத்தி வருவதாக அமெரிக்க அதிபர் ஜோ பைடன் தெரிவித்துள்ளார்.
அமெரிக்காவின் நியூ ஆர்லியன்ஸ் நகரில் புத்தாண்டு கொண்டாட்டம் கோலாகலமாக நடைபெற்றது. அப்போது கூட்டத்திக்கு மத்தியில் வேகமாக ஓடிய டிரக் வாகனம் பொதுமக்கள் மீது மோதியது. வாகனத்தை ஓட்டிவந்த சம்சத் தின் ஜபார் என்பவர் துப்பாக்கிச்சூடு நடத்தியதாகவும் கூறப்படுகிறது. இந்த சம்பவத்தில் 15 பேர் உயிரிழந்த நிலையில், 30-க்கும் மேற்பட்டோர் படுகாயமடைந்தனர்.
இதனைத்தொடர்ந்து லாஸ் வேகாஸ் நகரில் உள்ள ட்ரம்ப்பின் ஹோட்டலுக்கு வெளியே நின்றிருந்த டெஸ்லா வாகனம் திடீரென வெடித்து சிதறியது. இந்த விபத்தில் ஒருவர் பலியான நிலையில் 7 பேர் காயமடைந்தனர்.
டெஸ்லா வாகன விபத்து தொடர்பாக தனது எக்ஸ் தளத்தில் விளக்கம் அளித்துள்ள தொழிலதிபர் எலான் மஸ்க், சைபர் ட்ரக்கில் வெடி பொருட்கள் எடுத்துச் செல்லப்பட்டதாகவும், அதனாலேயே விபத்து நிகழ்ந்ததாகவும் தெரிவித்துள்ளார். மேலும், வெடி விபத்துக்கு சைபர் ட்ரக் வாகனம் காரணம் அல்ல எனவும் எலான் மஸ்க் விளக்கமளித்துள்ளார்.
இரு சம்பவங்கள் குறித்து பேசிய அதிபர் ஜோ பைடன், உயிரிழந்தவர்களின் குடும்பத்திற்கு இரங்கல் தெரிவித்துள்ளார். நியூ ஆர்லியன்ஸ் நகரில் தாக்குதல் நடத்திய நபர் ராணுவத்தில் பணியாற்றியவர் எனவும் அவர் கூறியுள்ளார். அவர் தீவிரவாத அமைப்புடன் தொடர்பில் இருப்பது தெரிய வந்துள்ளதாகவும் கூறியுள்ளார். இரு சம்பவங்களுக்கும் இடையே தொடர்பு உள்ளதா என்பது குறித்து உளவுத்துறை விசாரணை மேற்கொண்டு வருவதாகவும் தெரிவித்துள்ளார்.
















