கும்பகோணம் அருகே உள்ள நாச்சியார்கோயிலில், மார்கழி மாதம் முக்கோடி தெப்பத் திருவிழா கொடியேற்றத்துடன் தொடங்கியது.
தஞ்சை மாவட்டம், கும்பகோணம் அருகே உள்ள நாச்சியார் கோயிலில், வஞ்சுளவள்ளி சமேத சீனிவாச பெருமாள் கோயில் அமைந்துள்ளது. இது 108 திவ்ய தேசங்களில் ஒன்றாகவும், உலகப் பிரசித்தி பெற்ற கல் கருட தலமாகவும் போற்றப்படுகிறது.
இக்கோயிலில் மார்கழி மாத முக்கோடி தெப்பத் திருவிழா கொடியேற்றத்துடன் தொடங்கியது. முன்னதாக, கொடிமரம் அருகே, உற்சவரான சீனிவாச பெருமாள் சமேத வஞ்சுளவள்ளி தாயார் விசேஷ பட்டு வஸ்திரங்கள் கூடிய சிறப்பு அலங்காரத்தில் எழுந்தருளினர்.
தொடர்ந்து, மேள தாளம் மற்றும் மங்கள வாத்தியங்கள் முழங்க, கருட உருவம் வரையப்பட்ட கொடி, கோயிலில் உள்ள கொடிமரத்தில் ஏற்றப்பட்டது. விழாவின் முக்கிய நிகழ்வான கல் கருட சேவை வரும் 6 -ஆம் தேதி நடைபெற உள்ளது.