இலவசமாக இருசக்கர வாகனத்தை பழுது நீக்கக் கோரி ஒர்க் ஷாப் உரிமையாளரை தாக்கிய விவகாரத்தில் சார்பு ஆய்வாளரை சஸ்பெண்ட் செய்து மதுரை மாவட்ட எஸ்பி உத்தரவிட்டுள்ளார்.
மதுரை மாவட்டம் வாடிப்பட்டி பகுதியில் திண்டுக்கல்லைச் சேர்ந்த சீனிவாசன் என்பவர் இருசக்கர வாகன மெக்கானிக் கடை வைத்துள்ளார். இவரது கடைக்கு வாடிக்கையாக வரும் பாலமேடு காவல்நிலைய சார்பு ஆய்வாளர் அண்ணாதுரை பணம் கொடுக்காமல் இலவசமாக தனது புல்லட்டை தொடர்ந்து பழுது நீக்கம் செய்து வந்ததாக தெரிகிறது.
8 ஆயிரம் ரூபாய்க்கு மேல் பாக்கி வைத்துள்ள எஸ்ஐ அண்ணாதுரை மீண்டும் தனது இருசக்கர வாகனத்தை பழுது நீக்கம் செய்யுமாறு கூறியுள்ளார். அதற்கு சீனிவாசன் எதிர்ப்பு தெரிவிக்கவே, அதில் ஆத்திரமடைந்த எஸ்.ஐ. அண்ணாதுரை, சீருடையில் உரிமையாளரை கன்னத்தில் தாக்கியுள்ளார். இந்த சம்பவம் அங்கு பொருத்தப்பட்டிருந்த சிசிடிவி கேமராவில் பதிவானது.
இது குறித்தான சிசிடிவி காட்சிகளின் அடிப்படையில் எஸ்.ஐ. அண்ணாதுரை மீது நடவடிக்கை எடுக்குமாறு மாவட்ட ஆட்சியரிடம் சீனிவாசன் புகார் அளித்துள்ளார். அதனடிப்படையில், சார்பு ஆய்வாளர் அண்ணாதுரையை சஸ்பெண்ட் செய்து மாவட்ட காவல் கண்காணிப்பாளர் அரவிந்த் உத்தரவிட்டார். மேலும் பணியிடை நீக்கம் செய்யப்பட்ட அண்ணாதுரையிடம் துறை சார்ந்த விசாரணை நடத்தவும் உத்தரவிட்டுள்ளார்.