ஆம் ஆத்மி அரசால் அறிமுகம் செய்யப்பட்ட மதுபான கொள்கையால் டெல்லி அரசுக்கு 2 ஆயிரத்து 26 கோடி ரூபாய் வருவாய் இழப்பு ஏற்பட்டுள்ளதாக சி.ஏ.ஜி. அறிக்கை தெரிவிக்கிறது.
தலைநகர் டெல்லியில் கடந்த 2021- 22ஆம் நிதியாண்டில் ஆம் ஆத்மி அரசால் கொண்டு வரப்பட்ட மதுபான கொள்கையில் பல கோடி ரூபாய் மோசடி நடந்ததாக புகார் எழுந்தது.
இதுதொடர்பாக அமலாக்கத்துறை அதிகாரிகள் விசாரணை நடத்தி வந்த நிலையில், அப்போதைய முதலமைச்சர் அரவிந்த் கெஜ்ரிவால், துணை முதலமைச்சர் மணீஷ் சிசோடியா ஆகிய இருவரும் கைது செய்யப்பட்டு தற்போது ஜாமினில் உள்ளனர்.
இந்த நிலையில், மதுபான கொள்கை தொடர்பான சி.ஏ.ஜி. அறிக்கை தற்போது வெளியாகியுள்ளது. அதில், மதுபான கொள்கையால் அரசுக்கு 2 ஆயிரத்து 26 கோடி ரூபாய் வருவாய் இழப்பு ஏற்பட்டது தெரியவந்துள்ளது.
மேலும், பல்வேறு நடைமுறைகள் மீறப்பட்டுள்ளதாகவும், சலுகைகள் காட்டப்பட்டதாகவும் அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.
ஏற்கனவே, முதலமைச்சர் பங்களா புனரமைப்பில் பல கோடி ரூபாய் மோசடி நடந்திருப்பதாக தகவல் வெளியான நிலையில், தற்போது வெளியாகியுள்ள சி.ஏ.ஜி அறிக்கை, வரவிருக்கும் சட்டசபை தேர்தலில் ஆம் ஆத்மி கட்சிக்கு பெரும் பின்னடைவை ஏற்படுத்தும் என அரசியல் வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.