நாமக்கல் மாவட்டம் பள்ளிபாளையத்தில் இளம்பெண்ணின் தற்கொலைக்கு காரணமான மாணவன் மீது நடவடிக்கை எடுக்கக்கோரி மாவட்ட காவல் கண்காணிப்பாளரிடம் பாமகவினர் மனு அளித்தனர்.
இருவம்பாளையத்தை சேர்ந்த 19 வயதான இளம்பெண் ஒருவரும், பெருந்துறையைச் சேர்ந்த ஹரீஷ் என்ற கல்லூரி மாணவரும் காதலித்து வந்தனர். இவர்களது காதலை பெண்ணின் பெற்றோர் கண்டித்ததாக கூறப்படுகிறது.
இந்நிலையில் கடந்தாண்டு டிசம்பர் மாதம் 24-ஆம் தேதி வீட்டில் தனியாக இருந்த இளம்பெண் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார். இதுதொடர்பாக போலீசார் விசாரணை மேற்கொண்டு வந்த நிலையில், இளம்பெண்ணை அந்த இளைஞர் பாலியல் வன்கொடுமை செய்தது தெரியவந்தது.
மேலும், தற்கொலை செய்வதற்கு முன் ஹரீஷிடம் இளம்பெண் பேசிய ஆடியோ வெளியாகி பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
இந்த நிலையில், இளம்பெண்ணை ஏமாற்றி பாலியல் வன்கொடுமை செய்து தற்கொலைக்கு தூண்டியதாக ஹரீஷ் மீது காவல்நிலையத்தில் புகார் தெரிவிக்கப்பட்டது.
இதுதொடர்பான விசாரணை நடந்து வரும் நிலையில், காவல் கண்காணிப்பாளர் அலுவலகத்துக்கு வந்த பாமகவினர், குற்றஞ்சாட்டப்பட்ட மாணவர் மீது கடும் நடவடிக்கை எடுக்கக்கோரி புகார் மனு அளித்தனர்.