சேலம் இளம்பிள்ளை பாரம்பரிய சேலைகளின் மவுசு குறைந்து, அழியும் நிலை உருவாகியுள்ளதால், அதனை மீட்டெடுக்க உரிய நடவடிக்கை எடுக்குமாறு நெசவாளர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர். இது பற்றிய ஒரு செய்தித் தொகுப்பை தற்போது காணலாம்..!
சேலம் மாவட்டம் இளம்பிள்ளையில் தயாராகும் சில்க் காட்டன், லேடன் காட்டன், ஃபேன்சி காட்டன், சாஃப்ட் சில்க் உள்ளிட்ட சேலைகளுக்கு பெண்கள் மத்தியில் எப்போதுமே குறையாத மவுசு உண்டு.
மற்ற சேலைகளை ஒப்பிடுகையில் இளம்பிள்ளையில் தயாராகும் இந்த சேலைகள், 10 ஆண்டுகள் வரை கூடுதலாக உழைக்கும் தன்மை கொண்டது. இதுவே இந்த சேலைகளுக்கு மக்கள் மத்தியில் கிடைக்கும் வரவேற்புக்கு முக்கிய காரணமாகவும் உள்ளது. இளம்பிள்ளையில் இருந்து தமிழகத்தின் முக்கிய நகரங்களுக்கும், வெளி மாநிலங்களுக்கும் இந்த சேலைகள் விற்பனைக்காக அனுப்பி வைக்கப்படுவது வாடிக்கை.
குறிப்பாக, பொங்கல் பண்டிகைக்கு ஒரு மாதம் முன்பே சேலைகள் அனைத்தும் வெளியூர்களுக்கும், வெளி மாநிலங்களுக்கும் விற்பனைக்கு சென்றுவிடும். ஆனால் இந்த முறை சூரத் சேலைகள் வருகையால் இளம்பிள்ளை சேலைகளுக்கு மவுசு குறைந்து, விற்பனை கடுமையாக பாதித்துள்ளது. இதனால் பெரும் நஷ்டத்தை சந்தித்துள்ள நெசவாளர்கள், தயாரித்த சேலைகளை சாலையோர கடை அமைத்து விற்பனை செய்ய தொடங்கியுள்ளனர்.
5 லட்சம் தொழிலாளர்கள் வாழ்வாதாரத்தை இழந்துள்ளதால், அவர்கள் பிழைப்பு தேடி வேறு வேலைகளுக்கு செல்ல வேண்டிய கட்டாயத்திற்கு தள்ளப்பட்டுள்ளனர்.
இந்நிலையில், சூரத் சேலைகள் உள்ளிட்ட பிற மாநில சேலைகளின் வருகையை ஒழுங்குமுறைபடுத்தி, பாரம்பரிய இளம்பிள்ளை சேலைகளுக்கு முறையான அங்கீகாரம் கிடைக்க தமிழக அரசு வழிவகை செய்ய வேண்டும் என்பதே நெசவாளர்களின் கோரிக்கையாக உள்ளது.