தடை செய்யப்பட்ட பொருட்கள் சிறை வளாகத்திற்கு கொண்டு செல்லப்படுவது எப்படி என்பது குறித்து சிறைத்துறை டிஜிபி அறிக்கை தாக்கல் செய்ய சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
சேலம் ஆர்.எஸ்.எஸ் நிர்வாகி ஆடிட்டர் ரமேஷ் கொலை வழக்கில் புழல் சிறையில் அடைக்கப்பட்டுள்ள பன்னா இஸ்மாயில், பிலால் மாலிக் ஆகிய இருவர் சிறைத்துறை அதிகாரிகளால் கடுமையாக தாக்கப்பட்டதாக புகார் எழுந்தது.
இதையடுத்து இருவருக்கும் தனியார் மருத்துவமனையில் உரிய சிகிச்சை அளிக்கக்கோரி, சென்னை உயர் நீதிமன்றத்தில் உறவினர்கள் மனுதாக்கல் செய்தனர்.
இதுதொடர்பான வழக்கு நீதிபதிகள் சுப்ரமணியம், லட்சுமி நாராயணன் ஆகியோர் அடங்கிய அமர்வில் விசாரணைக்கு வந்தது.
அப்போது, அரசு தரப்பில் ஆஜரான வழக்கறிஞர் ராஜ் திலக், சிறையில் சோதனை நடத்தியபோது குற்றவாளிகளிடம் இருந்து செல்போன் பறிமுதல் செய்யப்பட்டதாகவும், இதையடுத்து சிறைத்துறை அதிகாரிகள் மீது குற்றவாளிகள் தாக்குதல் நடத்தியதாகவும் விளக்கமளித்தார்.
தடை செய்யப்பட்ட செல்போன், கஞ்சா உள்ளிட்டவை சிறை வளாகத்திற்குள் கொண்டு செல்லப்படுவது எப்படி? என கேள்வி எழுப்பிய நீதிபதிகள், இதுதொடர்பாக அறிக்கை தாக்கல் செய்யவும் சிறைத்துறை டிஜிபி-க்கு உத்தரவிட்டனர்.