பெண்களுக்கு ரூ.2,500 மாதாந்திர உதவி, பெண்களுக்கு இலவச எல்பிஜி சிலிண்டர்கள் உள்ளிட்ட பல்வேறு தேர்தல் வாக்குறுதிகளை பாஜக வெளியிட்டுள்ளது.
வரும் பிப்ரவரி 5-ம் தேதி டெல்லி சட்டப்பேரவைத் தேர்தல் நடைபெற உள்ளது. இந்த தேர்தலில் ஆளும் ஆம் ஆத்மி, பாஜக, காங்கிரஸ் இடையே மும்முனை போட்டி நிலவுகிறது.
இந்நிலையில் டெல்லியில் உள்ள பாஜக தலைமை அலுவலகத்தில் இன்று தேர்தல் அறிக்கையை பாஜக தேசிய தலைவர் ஜெ. பி. நட்டா வெளியிட்டார்.
பாஜக தேர்தல் அறிக்கையில் முக்கிய வாக்குறுதிகள்:
மகிளா சம்ரிதி யோஜனா திட்டத்தின் கீழ் டெல்லி பெண்களுக்கு ரூ.2,500, டெல்லியில் ஏழைப் பெண்களுக்கு ரூ.500 சிலிண்டர் மானியம், ஒவ்வொரு ஹோலி மற்றும் தீபாவளியிலும் 1 சிலிண்டர் இலவசம், பெண்களுக்கு 6 சத்துணவுப் பெட்டிகள், கர்ப்பிணித் தாய்மார்களுக்கு ரூ.21,000, 60 முதல் 70 வயது வரை உள்ள மூத்த குடிமக்களுக்கான ஓய்வூதியம் 2,000 ரூபாயில் இருந்து 2,500 ரூபாயாக உயர்த்தப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.
70 வயதுக்கு மேற்பட்ட மூத்த குடிமக்கள், விதவைகள் மற்றும் மாற்றுத்திறனாளிகளுக்கான ஓய்வூதியம் தற்போதைய ரூ.2,500-ல் இருந்து ரூ.3,000 ஆக உயர்த்தப்படும்.
அடல் கேண்டீன் யோஜனா – குடிசைப் பகுதிகள் ( ஜுக்கி ஜோப்டி ) மற்றும் கிளஸ்டர்களில் வசிக்கும் மக்களுக்கு 5 ரூபாய்க்கு உணவு வழங்கப்படும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.