திண்டுக்கல் மாவட்டம், வத்தலக்குண்டு அருகே நடைபெற்ற கோயில் திருவிழாவில் ஆயிரக்கணக்கான வாழைப்பழங்கள் சூறையிட்ட வினோத நிகழ்வு நடைபெற்றது.
சேவுகம்பட்டியில் 800 ஆண்டுகள் பழமைவாய்ந்த சோலைமலை அழகர்பெருமாள் கோயில் அமைந்துள்ளது. இங்கு விவசாயம் செழிக்கவும், மும்மாரி மழை பெய்யவும் வேண்டி விவசாயிகள் வாழைப்பழங்களை சூறைவிடுவது வழக்கம்.
அதன்படி காவல் தெய்வமான ரெங்கம்மாள் கோயிலில் பெரிய பாத்திரங்களில் வாழைப்பழங்கள் நிரப்பப்பட்டு பூஜை நடத்தப்பட்டது. பின்னர் அவை முக்கிய வீதிகளின் வழியாக மேளதாளம், வான வேடிக்கையுடன், சோலைமலை அழகர் பெருமாள் கோயிலுக்கு ஊர்வலமாக கொண்டு செல்லப்பட்டன.
அங்கு நடைபெற்ற சிறப்பு பூஜைகளுக்கு பின்னர், கோயிலுக்கு வெளியே வாழைப்பழங்களை பக்தர்கள் சூறைவிட்டனர். அவற்றை பெருமாளின் பிரசாதமாக நினைத்து பக்தர்கள் வீட்டிற்கு எடுத்து சென்றனர்.