உலகில் வேகமாக வளரும் பொருளாதார நாடாக இந்தியா நீடிக்கும் என உலக வங்கி தெரிவித்து உள்ளது.
இதுதொடர்பாக உலக வங்கி வெளியிட்டுள்ள அறிக்கையில், வலுவான வரி வருவாயின் காரணமாக, இந்தியாவின் நிதிப் பற்றாக்குறை இனி வரும் ஆண்டுகளில் குறையும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
அடுத்த இரண்டு நிதியாண்டுகளுக்கு இந்தியாவின் பொருளாதார வளர்ச்சி 6.70 சதவீதமாக இருக்கும் என்றும், இந்தியாவின் சேவைகள் துறை நிலையான வளர்ச்சியை பதிவு செய்யக்கூடும் எனவும் கூறப்பட்டுள்ளது.
அதே நேரத்தில் சரக்கு கையாளுதல், உட்கட்டமைப்பை மேம்படுத்துதல், வரி வருவாய் சீர்திருத்தங்கள் உள்ளிட்ட மத்திய அரசின் முன்னெடுப்பால், உற்பத்தி துறை வளர்ச்சியும் வலுப்பெறக் கூடும் என்று உலக வங்கி தெரிவித்துள்ளது.
மேலும், தொழிலாளர் சந்தையில் முன்னேற்றம், குறைந்து வரும் பணவீக்கம் உள்ளிட்ட காரணங்களால் தனிநபர் நுகர்வு அதிகரிக்கும் என்றும், அதிகரித்து வரும் தனியார் முதலீடு, நிறுவனங்களின் வலுவான இருப்புநிலை ஆகியவற்றால், முதலீட்டுத்துறை வளர்ச்சி நிலையாக இருக்கும் எனவும் எதிர்பார்க்கப்படுகிறது.
தெற்காசியாவை பொறுத்தவரை, அடுத்த நிதியாண்டில் இந்தியா, நேபாளம், உள்ளிட்ட நாடுகளில் பணவீக்கம் கட்டுக்குள் இருக்கும் என்றே எதிர்பார்க்கப்படுவதாக உலக வங்கி தெரிவித்துள்ளது.