நம் நாட்டின் விடுதலையை நாமே போர் புரிந்து பெற வேண்டும் என்ற எண்ணத்தில் ஆங்கிலேய ஆட்சிக்கு எதிராக தேசிய ராணுவத்தை கட்டமைத்து போராடிய சுந்திர போராட்ட வீரர் நேதாஜி சுபாஷ் சந்திர போஸின் பிறந்த தினம் இன்று. சுதந்திரத்திற்காக அவர் ஆற்றிய பணிகளை இந்த செய்தித் தொகுப்பில் சற்று விரிவாக பார்க்கலாம்.
1897 ஜனவரி 23…. இந்திய வரலாற்றிலும், சுதந்திர போராட்டத்திலும் முக்கிய பங்கு வகித்த உன்னத போராளியை உலகுக்கு அறிமுகப்படுத்திய தினம். ஒடிஷா மாநிலத்தில் ஜானகிநாத் போஸுக்கும், பிரபாவதி தேவிக்கும் ஒன்பதாவது மகனாக பிறந்தவர் தான் இந்த நேதாஜி சுபாஷ் சந்திர போஸ்…
லண்டனுக்கு சென்று தற்போதைய ஐ.ஏ.எஸ் என்று அழைக்கப்படும் ஐ.சி.எஸ் பணியில் இருந்த நேதாஜி சுபாஷ்சந்திர போஸ், லண்டனில் இந்திய அமைச்சராக இருந்த மாண்டேகுவை ஒரு நாள் சந்தித்து, ஐ.சி.எஸ் பட்டத்தையும், அதனால் கிடைத்த பதவியையும் துறந்துவிடுவதாக கூறி பரபரப்பை கிளப்பினார்.
ராஜினாமாவை ஏற்க மறுத்த அமைச்சர் மாண்டேகு, பல முறை வேண்டுகோள் விடுத்தும், தன்னுடைய முடிவில் இம்மியளவு கூட மாற்றமில்லை என்பதை சுபாஷ் சந்திர போஸ் திட்டவட்டமாக தெரிவித்துவிட்டார்.
சுபாஷ் லண்டனில் இருந்தாலும் அவரின் எண்ணம் அனைத்தும் இந்தியாவிலேயே இருந்தது. லண்டனில் ஆங்கிலேயர்கள் சுதந்திரமாக வாழ்வதும், இந்தியாவில் மக்கள் அடிமைப்படுத்தி வைக்கப்பட்டிருப்பதும் நேதாஜியின் மனதை உலுக்கிக் கொண்டே இருந்தது. சுபாஷ் சந்திர போஸின் ஆற்றலை அறிந்த தேசபந்து தாஸ், வங்கத்திலே ஒரு தேசியக் கல்லூரியை உருவாக்கி அதில் நேதாஜியை முதல்வராக அமரவைத்தார்.
25 வயது இளைஞர் கல்லூரித் தலைவர் பொறுப்பை ஏற்று அதனை வழிநடத்த முடியுமா என்ற கேள்விகளுக்கு பின்னாளில் நேதாஜியின் சிறப்பான செயல்பாடுகளே பதிலாக அமைந்தது.
1935ம் ஆண்டு உடல்நலக்குறைவால் பாதிக்கப்பட்ட நேதாஜி, வியட்நாமுக்கு சென்று பின்னர் அங்கிருந்து ஜெனிவா சென்று நோபல் பரிசுபெற்ற ரோமன் ரோலந்து எனும் புகழ்பெற்ற எழுத்தாளரை சந்தித்தார். அங்கு தங்கியிருந்த காலகட்டத்தில் நேதாஜி சுபாஷ் சந்திர போஸ் எழுதிய இந்தியப் போராட்டம் பற்றிய நூலை கண்டு அஞ்சி நடுங்கிய ஆங்கில அரசாங்கம், அந்த புத்தகத்தை இந்தியாவிற்குள் நுழைய தடைவிதித்துவிட்டது.
உயர்ந்த லட்சியத்தோடு, கொள்கை உறுதியோடும் விளங்கிய சுபாஷ் சந்திரபோஸ், வங்கத்தின் தலைவர் சி.ஆர் தாஸ் வழிகாட்டுதலோடு காங்கிரஸ் கட்சியில் இணைந்து இந்திய சுதந்திர போராட்டத்திலும் பங்கேற்றார்.
1938ம் ஆண்டு இந்திய தேசிய காங்கிரஸ் கட்சியின் தலைவராக தேர்ந்தெடுக்கப்பட்டு தீவிரமாக செயல்பட்டு வந்த நேதாஜியை, அரசுக்கு எதிராக மக்களை ஒன்று திரட்டுகிறார் எனக்கூறி ஆங்கிலேய அரசு கைது செய்து சிறையில் அடைத்தது.
இரண்டாம் உலகப் போர் நடந்து கொண்டிருந்த கால கட்டத்தில், சிறையில் இருந்து தப்பித்த நேதாஜி, சுந்திர இந்தியா மையம் என்ற அமைப்பையும் தொடங்கினார்.
இந்தியா விடுதலைப் பெறுவதற்கு அண்ணல் காந்தியடிகள் கடைபிடித்துவரும் அன்பு நெறிகள் மட்டும் போதாது என்னும் கருத்து சுபாஷ் சந்திர போசுக்கு நீண்டகாலமாகவே இருந்தது. தன்னுடைய தீவிரமான கருத்தை ஒளிவு மறைவு இன்றி காந்தியடிகளிடமே தெரிவிக்கவும் செய்தார். இருந்தாலும் இந்திய விடுதலைப் போருக்கு காந்தியடிகளின் தலைமை தான் வேண்டும் என்பதில் அவர் அசையாத நம்பிக்கையையும் கொண்டிருந்தார்.
இதற்கு இடைப்பட்ட காலத்தில் தான் இந்தியாவை ஆங்கிலேயர்களின் பிடியில் இருந்து மீட்பதற்காக வெளிநாடுகளுக்குச் சென்று அங்குள்ளவர்களின் உதவியை நாடினார். நமது நாட்டின் விடுதலையை நாமே போர் புரிந்து கைப்பற்றியாக வேண்டும் என்பதாலே தாம் நாட்டை விட்டு வெளியேறி பிற நாட்டினரின் உதவியோடு இந்திய விடுதலைப் போரில் இறங்குவதாகவும், அதற்கு உங்களின் ஆசிர்வாதம் வேண்டும் என 1944 ஆம் ஆண்டு ஜூலை 6ம் தேதி சிங்கப்பூர் வானொலியின் மூலம் காந்தியடிகளுக்கு சுபாஷ் சந்திர போஸ் விடுத்த செய்தி நாடு முழுவதும் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தியது.
தாய்நாட்டை விட்டு தனிமனிதனாக வெளியேறி அயல்நாட்டில் இந்திய தேசிய ராணுவத்தை அமைத்து பிரிட்டிஸ் ஏகாதிபத்தியத்திற்கு எதிராக ஆயுதமேந்திப் போராடிய நேதாஜி, 1944ஆம் ஆண்டு பிரிட்டிஷ் படைகளுக்கு எதிராக பெரும் போர் ஒன்றையும் நிகழ்த்திக் காட்டினார்.
1945ம் ஆண்டு ஆகஸ்ட் மாதம் 18 ஆம் தேதி விமான விபத்தில் மர்மமான முறையில் சுபாஷ் சந்திரபோஸ் இறந்துவிட்டதாக தகவல்கள் பரவின.
அது தொடர்பான அதிகாரப்பூர்வ தகவல் எதுவும் கிடைக்காத நிலையில், அவரின் இறப்பு குறித்தும் இன்றளவும் பல்வேறு விதமான தகவல்கள் பரவி வருகின்றன. வீரமிக்க அணுகுமுறையால் விடுதலைப் போராட்டத்தில் பெரும் திருப்புமுனையை ஏற்படுத்தி வீரத்தின் அடையாளமாக திகழ்ந்த நேதாஜி சுபாஷ் சந்திர போஸின் வீரமும், தியாகமும் நாட்டு மக்கள் மனதில் எந்நாளும் நிலைத்திருக்கும்.