பிரபல பாலிவுட் நடிகர் சைஃப் அலிகானை கத்தியால் குத்திய வழக்கில் கைது செய்யப்பட்ட வங்கதேசத்தை சேர்ந்த இஸ்லாம் ஷேசாத், இந்தியாவுக்குள் எப்படி வந்தார் ? என்பது பற்றி அதிர்ச்சி தகவல்கள் வெளியாகியுள்ள. இது பற்றிய ஒரு செய்தி தொகுப்பு.
கடந்த வாரம், பாலிவுட் நடிகர் சைஃப் அலிகான் வீட்டுக்குள் அத்துமீறி நுழைந்த மர்ம நபர், அவரைக் கத்தியால் குத்தியதில், சைஃப் அலிகான் படுகாயம் அடைந்தார். சிகிச்சைக்காக பாந்த்ராவில் உள்ள லீலாவதி மருத்துவமனையில் அனுமதிக்கப் பட்ட சைஃப் அலிகான், அறுவை சிகிச்சை முடிந்த பின் வீடு திரும்பி இருக்கிறார்.
இந்த சம்பவம் நடந்த 70 மணிநேரத்துக்குப் பின், தானே நகரில் பதுங்கி இருந்த முகமது ஷரிஃபுல் இஸ்லாம் ஷேசாத் என்ற நபரை கைது செய்தனர். இதனையடுத்து மும்பை நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்ட ஷேசாத்தை ஆறு நாட்கள் காவலில் எடுத்து விசாரிக்க நீதிமன்றம் அனுமதி அளித்துள்ளது.
விசாரணையில் கொல்கத்தாவில் வசிப்பதாக ஷேசாத் கூறியிருந்தாலும், ஷேசாத்தின் தொலைபேசியில் வங்க தேச எண்களுக்கும், வாட்ஸ் ஆப் மூலம் தமது குடும்ப உறுப்பினர்களுடன் பேசியிருந்ததை காவல் துறையினர் கண்டுபிடித்தனர்.
விசாரணையில் ஷேசாத் வங்கதேசத்தை சேர்ந்தவர் என்றும் அவர் சட்ட விரோதமாக இந்தியாவுக்குள் குடியேறியவர் என்றும் தெரியவந்துள்ளது. இந்தியாவுக்குள் நுழைந்த பிறகு, ஷேசாத் தனது பெயரை பிஜோய் தாஸ் என்று மாற்றிக்கொண்டுள்ளார்.
மேகாலயாவில் உள்ள இந்தியா-வங்கதேச எல்லை 443 கிலோமீட்டர் நீளமானது. இங்கே உள்ள டாவ்கி நதி இருநாடுகளுக்கும் இடையே ஒரு திறந்த எல்லையாக உள்ளது. டாவ்கி நதி இரு நாடுகளுக்கு இடையே வர்த்தக பாதையாகவும் செயல்படுகிறது. சில காலமாகவே டாவ்கி நதி வழியாக வங்கத் தேசத்தினர் சட்டவிரோதமாக இந்தியாவுக்குள் நுழைவது அதிகமாகி வருகிறது. இந்த வழியாகத்தான், ஷேசாத் கடந்த ஏப்ரல் மாதம் இந்தியாவுக்குள் ஷேசாத் நுழைந்துள்ளான்.
வங்கதேசத்தின் ஜலோகாட்டி மாவட்டத்தின் நல்சிட்டி உபாசிலாவில் உள்ள ராஜபரியா கிராமத்தில் ஒரு சணல் வியாபாரியின் மகனான ஷேசாத், வங்கதேசத்தில் 2 ஆம் வகுப்பு வரை படித்ததாகவும், வேலை தேடி இந்தியா வந்ததாகவும் வங்கதேச ஊடகங்கள் செய்திகள் வெளியிட்டுள்ளன.
ஏற்கெனவே வங்க தேசத்தில், ஷேசாத் மீது நிறைய வழக்குகள் நிலுவையில் உள்ளதாக, ஷேசாத்தின் தந்தை ரூஹுல் அமீன் ஃபகிர் உறுதிப்படுத்தியுள்ளார்.
இந்தியாவுக்குள் சட்ட விரோதமாக நுழைந்த ஷேசாத், மேற்கு வங்கத்தில் தங்கியிருந்ததாகவும் ஏஜன்ட் ஒருவரின் உதவியுடன் வேறு ஒருவரின் ஆதார் அட்டையைப் பயன்படுத்தி சிம் கார்டைப் பெற்றதாகவும், பிறகு வேலை தேடி மும்பை வந்ததாகவும் விசாரணையில் தெரிய வந்துள்ளது.
மேற்கு வங்கத்தைச் சேர்ந்த குகுமோனி ஜஹாங்கீர் சேகா என்ற பெயரில் சேஷாத்தின் சிம்கார்டு பதிவு செய்யப்பட்டிருந்தது தெரியவந்துள்ளது.
குடியுரிமை ஆவணங்கள் தேவைப்படாத வேலைகளைத் தேடிய ஷேசாத், அமித் பாண்டே என்ற தொழிலாளர் ஒப்பந்ததாரரிடம் வேலைக்குச் சேர்ந்திருக்கிறார். வொர்லி மற்றும் தானேயில் உள்ள ஹோட்டல்களில் அமித் பாண்டேவுக்கு உதவியாக வேலை செய்து வந்துள்ளான் ஷேசாத்.
இந்நிலையில் சைஃப் அலிகான் வீட்டுக்கும், தப்பியோடிய பிறகு பதுங்கியிருந்த இடத்துக்கும் ஷேசாத்தை காவல் துறையினர் அழைத்து சென்று குற்றச் சம்பவத்தை மீண்டும் உருவாக்கி பதிவு செய்து கொண்டனர். தொடர்ந்து ஷேசாத்திடம் விசாரணை மேற்கொள்ளப்பட்டு வருவதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.