திருப்பூரில், ஆர்எஸ்.எஸ். மாவட்ட தலைவர் மீது தாக்குதல் நடத்திய நபர் மீது நடவடிக்கை எடுக்க வலியுறுத்தி தர்ணா போராட்டம் நடைபெற்றது.
திருப்பூரில் புத்தகக் கண்காட்சியில் சிறப்பு விருந்தினராக பங்கேற்று பேசிய கரு.பழனியப்பன், காந்தியை ஆர்.எஸ்.எஸ் கொலை செய்ததாக கூறினார். அவரது இந்த கருத்துக்கு, திருப்பூர் மாவட்டஆர்.எஸ்.எஸ். தலைவர் மோகனசுந்தரம் எதிர்ப்பு தெரிவித்து, நிகழ்ச்சி ஏற்பாட்டாளர்களுடன் வாக்குவாதத்தில் ஈடுபட்டார்.
அப்போது, அங்கிருந்த ஒருவர் அவரை தாக்கியதாக கூறப்படுகிறது. தகவலறிந்து, அங்கு சென்ற இந்து முன்னணி மாநில தலைவர் காடேஸ்வரா சுப்ரமணியம், பாஜக மாவட்ட தலைவர் செந்தில்வேல் உள்ளிட்டோர் புத்தக கண்காட்சி வளாகத்தை முற்றுகையிட்டு ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.
ஆர்எஸ்.எஸ். மாவட்ட தலைவர் மீது தாக்குதல் நடத்திய நபரை கைது செய்யவேண்டும் என அவர்கள் வலியுறுத்தினர். அப்போது, போலீசாருக்கும் போராட்டக்காரர்களுக்கும் இடையே லேசான தள்ளுமுள்ளு ஏற்பட்டது.
புகார் அளித்தால் நடவடிக்கை எடுக்கப்படும் என போலீசார் கூறியதை அடுத்து, போராட்டம் கைவிடப்பட்டு, காவல் நிலையத்தில் புகார் மனு அளிக்கப்பட்டது.