நெல்லையில் இறந்த தாயின் உடலை, மனநலம் பாதிக்கப்பட்ட மகன் 15 கிலோ மீட்டர் சைக்கிளில் வைத்து கொண்ட சென்ற சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
நாங்குநேரி, வடக்கு மீனவன்குளம், மாதாகோயில் தெருவில் பாலன் என்பவர் வசித்து வருகிறார். மனநலம் பாதிக்கப்பட்ட இவரது தாய் சிவகாமி அம்மாள்,
உடல்நலக்குறைவு காரணமாக நெல்லை அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார்.
இந்நிலையில், சிவகாமி அம்மாளை அவரது மகன் பாலன் திடீரென மருத்துவமனையில் இருந்து வீட்டிற்கு அழைத்து சென்றார். சைக்கிளில் அமர வைத்து கயிற்றால் கட்டி சுமார் 15 கிலோ மீட்டர் தூரம் தனது தாயை அழைத்து சென்றார். பாதி வழியிலேயே சிவகாமி அம்மாள் உயிரிழந்து விட, அதனை அறியாமலேயே பாலன் அவரை அழைத்து சென்றுள்ளார்.
இது குறித்து பாலனிடம் கேட்ட போது, தனது தாயின் உடல்நிலை குறித்து மருத்துவர்கள் ஆங்கிலத்தில் கூறியது எதுவும் புரியவில்லை என தெரிவித்தார்.
இந்நிலையில் மருத்துவமனையின் அலட்சியத்தாலே சிவகாமி அம்மாள் உயிரிழந்ததாக குற்றச்சாட்டு எழுந்துள்ளது. இது குறித்து பாலனின் சகோதரர் சவரிமுத்து அளித்த புகாரின் பேரில் போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.