பத்ம விருது அறிவிக்கப்பட்டுள்ள நடிகர் அஜித்குமார், தொழிலதிபர் நல்லிக் குப்புச்சாமி ஆகியோருக்கு மத்திய அமைச்சர் எல்.முருகன் வாழ்த்து தெரிவித்துள்ளார்.
இதுதொடர்பாக தனது எக்ஸ் தளப் பக்கத்தில் பதிவிட்டுள்ள அவர், கலைத் துறையில் சிறந்த பங்களிப்பு ஆற்றியவர்களுக்கு இந்திய அரசால் வழங்கப்படுகிற உயரிய விருதுகளில் ஒன்றான ‘பத்ம பூஷன்’ விருது பெறுகிற தமிழ்த் திரைப்பட நடிகர் அஜித்குமாருக்கு தனது அன்பார்ந்த வாழ்த்துகளைத் தெரிவித்துக் கொள்வதாகக் கூறியுள்ளார்.
தனது தனித்திறன் கொண்ட நடிப்புத் திறமையால் தமிழக குடும்பங்களில் தனக்கென்று தனித்த இடம் பெற்றுள்ள அஜித்குமாருக்கு இவ்விருது வழங்கப்படுவது மிகுந்த மகிழ்ச்சி அளிப்பதாகவும், மேலும் அவருக்கு பிடித்த கார் ரேசிலும் அவர் மேலும் பல விருதுகள் பெற மனமார்ந்த வாழ்த்துகள் என்றும் பதிவிட்டுள்ளார்.
இதேபோல், சிறந்த எழுத்தாளரும், தமிழக ஜவுளித்துறை தொழிலதிபருமான நல்லிக் குப்புச்சாமி அவர்களுக்கு தேசத்தின் உயரிய விருதுகளில் ஒன்றான ‘பத்ம பூஷன்’ விருது வழங்கப்பட்டிருப்பது மிகுந்த மகிழ்ச்சி அளிப்பதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.
ஜவுளி மற்றும் பட்டு தொழிற்துறையில் பெரும் சாதனையாளராக விளங்குவதுடன், கலை-பண்பாடு மற்றும் கல்விக்கான நிதிக் கொடைகளை வழங்குகின்ற சிறந்த கொடையாளராகவும் திகழ்ந்து வரும் நல்லிக் குப்புச்சாமிக்கு தனது அன்பார்ந்த வாழ்த்துகளைத் தெரிவித்துக் கொள்வதாகவும் அவர் பதிவிட்டுள்ளார்.
புதுச்சேரி மாநிலத்தைச் சேர்ந்த தவில் இசைக் கலைஞரான தட்சணாமூர்த்தி அவர்களுக்கு ‘பத்மஶ்ரீ’ விருது அறிவிக்கப்பட்டுள்ளது மிகுந்த மகிழ்ச்சி அளிப்பதாக கூறியுள்ள அவர்,
இந்திய அரசின் உயரிய விருதுகளில் ஒன்றான ‘பத்மஶ்ரீ’ விருது பெறுகிற தவில் இசைக் கலைஞர் தட்சணாமூர்த்தி அவர்களுக்கு தனது அன்பார்ந்த வாழ்த்துகளைத் தெரிவித்துக் கொள்வதாகப் பதிவிட்டுள்ளார்.
மேலும், மதுரை அலங்காநல்லூரைச் சேர்ந்த புகழ்பெற்ற பறை இசைக் கலைஞர் வேலு ஆசானுக்கு ‘பத்மஶ்ரீ’ விருது அறிவிக்கப்பட்டுள்ளது மிகுந்த மகிழ்ச்சி அளிப்பதாகவும் எல்.முருகன் தெரிவித்துள்ளார்.