நாட்டின் 76வது குடியரசு தின விழாவை ஒட்டி, மாவட்ட ஆட்சியர்கள் தேசிய கொடியை ஏற்றி வைத்து மரியாதை செலுத்தினர்.
சேலம் மகாத்மா காந்தி மைதானத்தில், மாவட்ட ஆட்சியர் பிருந்தா தேவி தேசிய கொடியை ஏற்றி வைத்தார். இதனை தொடர்ந்து, போலீசாரின் அணிவகுப்பு மரியாதையை அவர் ஏற்றுக்கொண்டார்.
நாகப்பட்டினம் மாவட்ட விளையாட்டு அரங்கில், மாவட்ட ஆட்சியர் ஆகாஷ் தேசிய கொடியை ஏற்றி வைத்து சமாதான புறாக்களை பறக்கவிட்டார். தொடர்ந்து காவல்துறையின் அணிவகுப்பு மரியாதை ஏற்று கொண்டார். மேலும் ஒரு கோடியே 9 லட்சம் ரூபாய் மதிப்பிலான நலத்திட்ட உதவிகளை பயனாளிகளுக்கு வழங்கினார்.
அரியலூர் மாவட்ட விளையாட்டு அரங்கில் மாவட்ட ஆட்சியர் ரத்தினசாமி தேசிய கொடியை ஏற்றி வைத்து மரியாதை செலுத்தினர். இதனையடுத்து மாவட்ட காவல் கண்காணிப்பாளர் தீபக் சிவாச்சுடன் இணைந்து காவல் வாகனத்தில் சென்று அணிவகுப்பு மரியாதையை ஏற்று கொண்டார். பின்னர் 29 காவலர்களுக்கு முதலமைச்சரின் சிறந்த காவலர்களுக்கான பதக்கங்களை வழங்கி கௌரவித்தார்.
புதுக்கோட்டை ஆயுதப்படை மைதானத்தில் மாவட்ட ஆட்சியர் அருணா தேசியக் கொடியை ஏற்றி வைத்து, காவலர்களின் அணிவகுப்பு மரியாதை ஏற்று கொண்டனர். இதனை அடுத்து, சிறப்பாக பணியாற்றிய 371 அலுவலர்களுக்கும், காவல்துறையினருக்கும் சான்றிதழ்களை வழங்கினார். விழாவில் மூவர்ண பலூன்கள் பறக்க விடப்பட்டன.
சிவகங்கை மாவட்ட ஆட்சியர் அலுவலக வளாக மைதானத்தில், ஆட்சியர் ஆஷா அஜித் தேசியக் கொடியை ஏற்றி வைத்தார். தொடர்ந்து மாவட்ட காவல் கண்காணிப்பாளர் ஆசிஷ் ராவத்துடன் இணைந்து மூவண்ண பலூன்களை பறக்க விட்டார். இதனை தொடர்ந்து காவல்துறையின் அணிவகுப்பு மரியாதையை ஏற்றுக்கொண்ட மாவட்ட ஆட்சியர், சுதந்திர போராட்ட தியாகிகளுக்கு மரியாதை செய்தார்.