வேலையில்லா திண்டாட்டம், இட ஒதுக்கீடு பிரச்சனை காரணமாக மாணவர் போராட்டம் தீவிரமடைந்ததைத் தொடர்ந்து, ஷேக் ஹசீனா தனது பிரதமர் பதவியை ராஜினாமா செய்து விட்டு, நாட்டை விட்டு வெளியேறினார். அதன் பிறகு, கடந்த 6 மாதங்களில் வங்கதேசத்தில் வேலையில்லா திண்டாட்டம் அதிகரித்துள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. அது பற்றிய ஒரு செய்தி தொகுப்பு.
வங்க தேசம், உலகின் ஏழாவது அதிக மக்கள் தொகை கொண்ட நாடாகும். 17 கோடி மக்கள் தொகை கொண்ட அந்நாட்டில்,ஏறத்தாழ 30 சதவீதம் இளைஞர்கள் என்பது குறிப்பிடத் தக்கது.
2023ம் ஆண்டின் அதிகாரப்பூர்வ புள்ளிவிவரங்களின்படி, 15 முதல் 24 வயதுக்குட்பட்ட ஐந்தில் ஒருவருக்கு வங்கதேசத்தில் வேலை இல்லை. மேலும், ஐந்தில் ஒருவருக்கு அடிப்படை கல்விக் கூட தேர்ச்சி பெறாமல் உள்ளனர்.
வங்க தேசத்தைப் பொறுத்த வரை, வேலை இல்லாதவர்களில் 87 சதவீதம் பேர் படித்த பட்டதாரிகள் ஆவார்கள். ஒவ்வொரு ஆண்டும் வேலை தேடும் 2 மில்லியனுக்கும் அதிகமான இளைஞர்களில், சுமார் 650,000 பட்டதாரிகள் என்பது குறிப்பிடத்தக்கது.
வேலைப் பாதுகாப்பு, நல்ல வருமானம் மற்றும் கௌரவம் என்ற கனவில் பல இளைஞர்கள் அரசு வேலைகளைத் தேடுகின்றனர். அதனால் 6 மாதங்களுக்கு முன் வரை, பல்கலைக் கழக நூலகங்கள் சிவில்-சர்வீஸ் தேர்வுக்காக காத்திருக்கும் இளம் பட்டதாரிகளால் நிரம்பின. கடந்த ஆண்டு, வெறும் 3,300 அரசு பணியிடங்களுக்குச் சுமார் 3,46,000 பேர் தேர்வில் கலந்து கொண்டதாக புள்ளிவிவரங்கள் தெரிவிக்கின்றன.
வேலையில்லா திண்டாட்டம் அதிகமான சூழலில், 1971 ஆம் ஆண்டில் நடந்த வங்கதேச சுதந்திர போராட்டத்தில் பங்கேற்ற வீரர்களின் வாரிசுகளுக்கு 30 சதவீத இட ஒதுக்கீட்டை அந்நாட்டு அரசு கொண்டு வந்தது. இட ஒதுக்கீட்டுக்கு எதிராக பல்கலைக்கழகங்கள் மற்றும் கல்லூரிகளில் போராட்டங்கள் தொடங்கின.
இந்த விவகாரம் நீதிமன்றங்களில் மாறி மாறி விசாரிக்கப்பட்டு வந்த நிலையில், இட ஒதுக்கீட்டை உறுதி செய்து உச்ச நீதிமன்றம் உத்தரவிட்டது. அதன் பிறகு, மாணவர் போராட்டங்கள் பிரதமர் ஷேக் ஹசீனா அரசுக்கு எதிராக திரும்பியது.
அதனால், பிரதமர் பதவியை ராஜினாமா செய்து விட்டு, நாட்டை விட்டு வெளியேறினார் ஷேக் ஹசீனா. நோபல் பரிசு பெற்ற யூனுஸ் தலைமையிலான இடைக்கால அரசு பதவியேற்றது.
அதன்பிறகு, வங்க தேசத்தின் வேலையில்லாத் திண்டாட்டம் காரணமாக நாட்டின் GDP வளர்ச்சி விகிதம் பாதியாகக் குறைந்துள்ளது என உலக வங்கி மற்றும் IMF இன் அறிக்கைகள் தெரிவிக்கின்றன. மேலும் வங்க தேசத்தின் பணவீக்கம் தற்போது 10.34 சதவீதமாக உயர்ந்துள்ளது.
கடந்த ஜூலை மற்றும் நவம்பர் மாதங்களில், வெளிநாட்டு முதலீடு 177 மில்லியன் அமெரிக்க டாலர் என்று வங்கதேசத்தின் மத்திய வங்கி தெரிவிக்கிறது. அதற்கு முந்தைய ஆண்டு, இதே காலகட்டத்தில் ஷேக் ஹசீனாவின் ஆட்சியில் 614 மில்லியன் அமெரிக்க டாலர் ஆகும்.
உயரும் பணவீக்கம் நாட்டில் மேலும் அமைதியின்மையை உண்டாக்கக்கூடும் என்றும் பொருளாதார நிபுணர்கள் எச்சரிக்கின்றனர்
அரசு வேலையும் இல்லை,தனியார் வேலையும் இல்லை என்ற நிலையில், அடிப்படை தேவைகளுக்காக எந்த வேலையும் செய்ய தயாராக இருப்பதாக பல இளைஞர்கள் தெரிவிக்கின்றனர்.
84 வயதான முகமது யூனுஸ் தலைமையிலான அரசை 26 வயது மாணவர் தலைவர்களான நஹித் இஸ்லாம் மற்றும் ஆசிப் மஹ்மூத் ஆகியோரால் வழிநடத்தப்படுவது நிலைமையை மேலும் மோசமாக்குகிறது.
வங்கதேசத்தில், முகமது யூனுஸை ஆட்சிக்குக் கொண்டு வந்த மாணவர் இயக்கத் தலைவர்களே, இப்போது வங்க தேச நிர்வாகத்தில் குழப்பத்தை ஏற்படுத்துகின்றனர் என்று அரசியல் வல்லுநர்கள் தெரிவித்துள்ளனர்.
விரைவில் வரவிருக்கும் தேர்தல்களுக்கு முன்னதாக நாட்டில் ஜனநாயகத்தை மீட்டெடுப்பதில் மிகவும் கடினமான சவாலை முகமது யூனுஸ் சந்திக்கிறார் என்பதே உண்மை.