பழனி முருகன் கோயில் தைப்பூச திருவிழாவை முன்னிட்டு நடைபெற்ற ஆலோசனை கூட்டத்தில், தொகுதியின் எம்.எல்.ஏ.வான செந்தில்குமார் பங்கேற்காதது சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.
தைப்பூசத் திருவிழா பழனி முருகன் கோயிலில் வரும் 5-ம் தேதி கொடியேற்றத்துடன் தொடங்க உள்ளது. விழாவின் முக்கிய நிகழ்வான தேரோட்டம் வரும் 11-ம் தேதி நடைபெறவுள்ளது. தைப்பூசத் திருவிழாவில் லட்சக்கணக்கானோர் பங்கேற்பார்கள் என்பதால், பக்தர்களுக்கு செய்ய வேண்டிய ஏற்பாடுகள் குறித்த ஆலோசனை கூட்டம் நடைபெற்றது.
அமைச்சர் சேகர்பாபு முன்னிலையில் நடைபெற்ற கூட்டத்தில், திண்டுக்கல் மாவட்டத்தின் அமைச்சர்களான ஐ.பெரியசாமி, சக்கரபாணி மற்றும் பழனி சட்டமன்ற உறுப்பினர் ஐ.பி.செந்தில்குமார், நாடாளுமன்ற உறுப்பினர் சச்சிதானந்தம் ஆகியோர் பங்கேற்பர் என தெரிவிக்கப்பட்டது.
ஆனால், அமைச்சர் ஐ.பெரியசாமியும், அவரது மகனும் பழனி எம்எல்ஏ-வுமான செந்தில்குமாரும் ஆலோசனை கூட்டத்தில் பங்கேற்கவில்லை. பழனி கோயில் அறங்காவலர் குழு உறுப்பினர்களை தேர்வு செய்ததில், அமைச்சர் சேகர்பாபுடன் கருத்து வேறுபாடு ஏற்பட்டதால், அமைச்சர் ஐ.பெரியசாமியும், எம்எல்ஏ செந்தில்குமாரும் ஆலோசனை கூட்டத்தை புறக்கணித்ததாக தகவல் வெளியாகியுள்ளது.
முன்னதாக நடைபெற்ற பழனி கோயில் தேர் வெள்ளோட்டத்திலும் அமைச்சர் ஐ.பெரியசாமியும், எம்எல்ஏ செந்தில்குமாரும் பங்கேற்கவில்லை.