ராமநாதபுரத்தில் பெய்த தொடர் மழையால் அறுவடைக்கு தயாராக இருந்த பல ஏக்கர் நெற்பயிர்கள் சேதமடைந்து விவசாயிகளை பெரும் கவலையடைய செய்துள்ளது. இதுகுறித்த ஒரு செய்தி தொகுப்பை தற்போது காணலாம்..!
வானம் பார்த்து விவசாயம் செய்யும் மானாவாரி நிலங்களில் பெய்யும் மழை விவசாயிகளுக்கு பெரும் மகிழ்ச்சியை தரும். ஆனால், பருவம் தவறி பெய்யும்போது அந்த மழையே அவர்களை பெரும் கவலையில் மூழ்கடித்துவிடும் என்பதை மறுப்பதற்கில்லை. தற்போது அந்த கவலைதான் ராமநாதபுரம் மாவட்டம், கடலாடி தாலுக்காவைச் சேர்ந்த விவசாயிகளை வாட்டி வதைத்து வருகிறது.
சிறைக்குளம் ஊராட்சிக்குட்பட்ட ஆய்க்குடி மற்றும் அதன் சுற்றுவட்டார பகுதிகளைச் சேர்ந்த விவசாயிகள், இந்த ஆண்டு சுமார் 25 ஆயிரம் ஹெக்டேர் அளவில், ஏக்கருக்கு 25 ஆயிரம் முதல் 30 ஆயிரம் ரூபாய் வரை செலவு செய்து நெல் சாகுபடி செய்திருந்தனர். விவசாயிகள் போட்ட கடும் உழைப்பிற்கு பலனாக நன்கு விளைந்த நெற்பயிர்கள் அறுவடைக்கு தயாராக இருந்த நிலையில், அப்பகுதிகளில் கடந்த சில நாட்களாக பெய்த தொடர்மழை அந்த விவசாயிகளின் வாழ்வாதாரத்தையே புரட்டிப்போட்டுள்ளது.
அறுவடைக்கு தயாராக இருந்த நெற்பயிர்கள் அனைத்தும் மழைநீரில் சாய்ந்து வீணானதுடன், விளை நிலங்களில் தேங்கி நின்ற தண்ணீரால் விளைந்த நெல் மணிகள் மீண்டும் முளைக்கவும் தொடங்கின. இதனால் தங்கள் பயிர்களை அறுவடையை செய்து பயிர் கடன்களை அடைக்கலாம், நல்ல லாபம் ஈட்டலாம் என எண்ணியிருந்த விவசாயிகளின் கனவு பொய்த்துப் போயுள்ளது. அரசு இயந்திரங்கள் ஆய்வு நடத்தி தங்களுக்கு உரிய நஷ்டயீடு வழங்காவிட்டால், விவசாயத்தை மட்டுமே நம்பி வாழும் தங்களுக்கு தற்கொலை செய்துகொள்வதை தவிற வேறு வழியில்லை என விவசாயிகள் வேதனை தெரிவித்துள்ளனர்.
கூட்டுறவு சங்கங்களில் கடன் வாங்கியும், வங்கியில் தங்கள் நகைகளை அடகு வைத்தும் விவசாயம் செய்துள்ள நிலையில், எதிர்பாராத இந்த மழையால் ஏற்பட்ட நஷ்டம் தங்கள் வாழ்வாதாரத்தை பாதித்துள்ளதாக விவசாயிகள் கவலை தெரிவித்துள்ளனர். அத்துடன் தேர்தலின்போது வாக்கு சேகரிக்க வந்த ஆளும் கட்சியினர், மழையால் பெரும் பாதிப்பை சந்தித்துள்ள தங்களை தற்போது வந்து சந்திக்காதது ஏன் எனவும் அவர்கள் கேள்வி எழுப்பியுள்ளனர்.
மழைநீரில் மூழ்கி முளைத்த நெற்பயிர்களை அரசால் கொள்முதல் செய்யவோ, வேளாண் உற்பத்தி நிலையங்களில் விற்கவோ முடியாத அவல நிலைக்கு விவசாயிகள் தள்ளப்பட்டுள்ளனர். இந்நிலையில், நஷ்டமடைந்த விவசாயிகளுக்கு அரசு ஏக்கருக்கு 25 ஆயிரம் ரூபாய் இழப்பீடு வழங்க வேண்டும் எனவும், கூட்டுறவுக் கடன்களை தள்ளுபடி செய்ய வேண்டும் எனவும், 100 சதவீத பயிர் காப்பீட்டு தொகை கிடைக்க வழிவகை செய்ய வேண்டும் எனவும் விவசாயிகள் சங்கத்தினர் கோரிக்கை விடுத்துள்ளனர்.
“கைக்கு எட்டியது வாய்க்கு எட்டவில்லை” என்ற கூற்றுக்கேற்ப விளைந்து நின்ற நெற்பயிர்களை அறுவடை செய்து லாபம் பெற முடியாமல், பெரும் நஷ்டத்தில் வாடி தவிக்கும் பாதிக்கப்பட்ட விவசாயிகளுக்கு அரசு நிர்வாகங்கள் கைகொடுக்குமா? என்ற கேள்வி எழுந்துள்ளது