அசாம் மாநிலத்தின் 2-வது தலைநகராக திப்ருகர் உருவாக்கப்படும் என குடியரசு தின விழாவில் அம்மாநில முதலமைச்சர் ஹிமந்த பிஸ்வா சர்மா அறிவித்துள்ளார்.
அசாம் மாநிலத்தில் நாட்டின் 76-வது குடியரசு தினவிழா கொண்டாட்டம் முதல்முறையாக திப்ருகரில் நடைபெற்றது. இதில் அம்மாநில முதலமைச்சர் ஹிமந்த பிஸ்வா சர்மா பங்கேற்று தேசிய கொடியேற்றி பல்வேறு அறிவிப்புகளை வெளியிட்டார்.
அப்போது பேசிய அவர்,
தேயிலை நகரமாக அறியப்படும் திப்ருகரை, மாநிலத்தின் 2-வது தலைநகராக மாற்ற முடிவு செய்துள்ளோம் என கூறினார். இங்கு தேசிய கொடியை ஏற்றியது, திப்ருகரை 2-வது தலைநகராக மாற்றுவதற்கான முதல் அடியாகும் எனவும் ஹிமந்த பிஸ்வா சர்மா தெரிவித்தார்.
அடுத்த ஆண்டு ஜனவரி 25ம் தேதி திப்ருகரில் புதிய சட்டசபை கட்டடம் கட்டுவதற்கான பணிகள் தொடங்கும் எனவும், அதற்கான பணிகள் 3 ஆண்டுகளுக்குள் நிறைவு செய்யப்படும் எனவும் அவர் தெரிவித்தார்.
மேலும், 2027ம் ஆண்டு முதல் ஒவ்வொரு ஆண்டு சட்டசபை கூட்டத்தின் ஒரு அமர்வு திப்ருகரில் நடக்கும் எனவும் ஹிமந்த பிஸ்வா சர்மா தெரிவித்தார்.