வக்ஃபு வாரிய சட்டத்திருத்த மசோதா தொடர்பாக பாஜக எம்.பி.க்கள் முன்வைத்த 14 திருத்தங்களை நாடாளுமன்ற நிலைக்குழு ஏற்றுக்கொண்டது.
வக்ஃபு வாரிய சொத்துகளை முறைப்படுத்தும் நோக்கில், அதில் இஸ்லாமிய பெண்கள் மற்றும் இஸ்லாமியர் அல்லாத 2 பேரை உறுப்பினா்களாக இடம்பெறச் செய்வது, வாரிய நிலங்களை மாவட்ட ஆட்சியா் அலுவலகத்தில் கட்டாயம் பதிவு செய்வது உள்ளிட்ட பல்வேறு திருத்தங்களுடன் வக்ஃபு சட்டத் திருத்த மசோதாவை மத்திய அரசு கொண்டுவந்தது.
இதற்கு எதிர்க்கட்சிகள் எதிர்ப்பு தெரிவித்ததால், நாடாளுமன்றக் கூட்டுக்குழு பரிசீலனைக்கு அனுப்பிவைக்கப்பட்டது. அக்குழு தலைவர் ஜகதாம்பிகா பால் தலைமையில் டெல்லியில் நடைபெற்ற கூட்டத்தில், பாஜக சார்பில் 23 திருத்தங்களும், எதிர்க்கட்சிகள் தரப்பில் 44 திருத்தங்களும் முன்வைக்கப்பட்டன.
மொத்தம் 66 திருத்தங்கள் முன்மொழியப்பட்ட நிலையில், இதன் மீது நடத்தப்பட்ட வாக்கெடுப்பில், பெரும்பான்மை உறுப்பினர்களின் ஆதரவுடன் ஆளும்கட்சி உறுப்பினர்கள் முன்வைத்த 14 திருத்தங்கள் ஏற்கப்பட்டன. எதிர்க்கட்சியினர் பரிந்துரைத்த 44 திருத்தங்களும் ரத்து செய்யப்பட்டன.
இதையடுத்து வரும் 29-ஆம் தேதி நடைபெறும் அடுத்த கூட்டத்தில் 14 திருத்தங்களுக்கும் ஒப்புதல் அளிக்கப்பட்டு மக்களவைத் தலைவரிடம் சமர்ப்பிக்கப்படும் என நாடாளுமன்ற கூட்டுக்குழு தலைவர் ஜகதாம்பிகா பால் தெரிவித்தார்.