அமெரிக்காவில் 20 ஆண்டுகளுக்குப் பிறகு மிகப் பெரிய விமான விபத்து நடந்துள்ளது. 67 பேரைப் பலிகொண்ட இந்த விமான விபத்துக்கு, ஜோ பைடன் அரசால் செயல்படுத்தப்பட்ட கொள்கைகளே காரணம் என்று அதிபர் ட்ரம்ப் குற்றம் சாட்டியுள்ளார். உண்மையில் இந்த கொடிய விமான விபத்து எப்படி நடந்தது? என்ன காரணம் ? என்பது பற்றிய ஒரு செய்தி தொகுப்பு.
வாஷிங்டனில் அமெரிக்கன் ஏர்லைன்ஸ் பயணிகள் விமானம், அமெரிக்க இராணுவ ஹெலிகாப்டருடன் நடுவானில் மோதி விபத்துக்குள்ளானது. நொறுங்கிய விமானம் (Potomac) போடோமேக் ஆற்றில் விழுந்தது. அமெரிக்கன் ஏர்லைன்ஸின் 5342 என்ற விமானம், கடந்த 2004 ஆம் ஆண்டில், கனடாவில் தயாரிக்கப்பட்டதாகும். இரட்டை எஞ்சின் கொண்ட இந்த விமானத்தில் 70 பயணிகள் வரை பயணிக்க முடியும்
இந்த ஜெட் விமானம் கன்சாஸ் நகரின் விசிட்டா பகுதியில் இருந்து புறப்பட்டது. இதில் 60 பயணிகளும், நான்கு விமான ஊழியர்களும் இருந்தனர். ரொனால்ட் ரீகன் தேசிய விமான நிலைய ஓடுபாதையை நெருங்கும் போது ராணுவத்தின் Black Hawk பிளாக் ஹாக் ஹெலிகாப்டர் மீது நடுவானில் மோதி சிதறி, அருகில் இருந்த போடோ மேக் ஆற்றில் விழுந்தது. விபத்தில் சிக்கிய ராணுவ ஹெலிகாப்டர் வர்ஜீனியாவில் இருந்து புறப்பட்டதாக ராணுவம் உறுதி செய்துள்ளது.
விமானமும் ஹெலிகாப்டரும் நடுவானில் மோதிக்கொண்ட காட்சிகள், விமான நிலையத்துக்கு அருகில் உள்ள கென்னடி மையத்தின் கண்காணிப்பு கேமராவில் பதிவாகி உள்ளது. வானில் ஒரு மிகப்பெரிய தீப்பந்து உருவானது போல இந்த விமான விபத்தின் காட்சிகள் நெஞ்சை பதற வைக்கிறது.
இந்த கோர விபத்தை நேரில் பார்த்தவர்கள், ஒரு மாபெரும் ரோம் நாட்டு மெழுகுவர்த்தியை எரிவதைப் போல் இருந்ததாக கூறியுள்ளனர்.மிக விரைவாக நொடிப் பொழுதில் இந்த விபத்து நடந்ததாக, தேசிய போக்குவரத்து பாதுகாப்பு வாரியம் தெரிவித்துள்ளது.
மேலும், விமானத்தின் தரவுகளும், விமானியின் அறையின் குரல் பதிவுகளும் அடங்கிய கறுப்பு பெட்டியைக் கைப்பற்றியுள்ளதாக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். இந்த கறுப்புப் பெட்டி, தேசிய போக்குவரத்து பாதுகாப்பு ஆய்வகத்தில் சோதனை செய்யப்படும் என்றும் கூறப் பட்டுள்ளது.
விபத்து நடந்த நேரத்தில் சுமார் 400 அடி உயரத்திலும், மணிக்கு 140 மைல் வேகத்திலும் விமானம் வந்து கொண்டிருந்ததாக, கடைசியாக அந்த விமானத்தில் இருந்து கிடைத்த தரவுகள் காட்டுகின்றன.
LiveATC.net என்ற நிறுவனமே, உலகெங்கிலும் உள்ள விமானப் போக்குவரத்துக் கட்டுப்பாட்டுக் கோபுரங்கள் மற்றும் ரேடார்களில் இருந்து, நேரடி விமானப் போக்குவரத்துக் கட்டுப்பாட்டு ஒளிபரப்புகளைச் செய்து வருகிறது. அதன் குரல் பதிவில், விமானம் முதலில் முதலாம் ஓடுபாதையில் தரையிறங்குவதற்கு அனுமதியளிக்கப்பட்டதை உறுதிபடுத்தியுள்ளது.
பயணிகள் ஜெட்விமானம் செல்லும் வரை காத்திருக்க அறிவுறுத்தப்பட்டதாகவும், அதற்கு ராணுவ ஹெலிகாப்டர் விமானியிடம் இருந்து எந்த பதிலும் வரவில்லை என்றும் தெரியவந்துள்ளது. விபத்து நடப்பதற்கு 30 வினாடிகளுக்குள், இந்த தகவல் பரிமாற்றம் நடந்திருப்பதாக கண்டறியப்பட்டுள்ளது.
விமானப் போக்குவரத்துக் கட்டுப்பாட்டின் தவறான தகவல் தொடர்பு விபத்துக்குக் காரணமாக இருக்கலாம் என்றும் கூறப்படுகிறது.
அமெரிக்காவின் விமானப் போக்குவரத்து நிர்வாகத்தில், விமானப் போக்குவரத்து கட்டுப் பாட்டாளர்கள் உட்பட 35,000 ஊழியர்கள் பணிபுரிகின்றனர்.
விபத்தில் இருந்த அனைவருக்கும், தனது இரங்கலைத் தெரிவித்துள்ள அதிபர் ட்ரம்ப், உயிரிழந்தவர் ஆன்மாக்களுக்கு இறைவன் அமைதியை அளிக்கட்டும் என்றும் கூறியுள்ளார். மேலும் இப்படி ஒரு விபத்து ஒருபோதும் நடந்திருக்கக் கூடாது என்று தெரிவித்துள்ளார்.
ஜோ பைடனின் பன்முக தன்மை கொள்கையின் படி, பணியிடங்கள் நிரப்பப் பட்டதால், விமானப் போக்குவரத்து நிர்வாகத்தின் தரம்குறைந்து விட்டதாக அமெரிக்க அதிபர் ட்ரம்ப் குற்றம் சாட்டியுள்ளார்.
கடந்த 1982 ஆம் ஆண்டு, ஜனவரி மாதத்தில், ஏர் புளோரிடா விமானம், விபத்துக்குள்ளாகி இதே போடோமாக் ஆற்றில் விழுந்தது. அந்த விபத்தில், 78 பேர் உயிரிழந்தனர் என்பது குறிப்பிடத் தக்கது.
மேலும், 2001 ஆம் ஆண்டு, கென்னடி விமான நிலையத்தில் இருந்து புறப்பட்ட சிறிது நேரத்திலேயே, அமெரிக்கன் ஏர்லைன்ஸ் விமானம் நியூயார்க்கின் பெல்லி துறைமுகத்தின் குடியிருப்புப் பகுதியில் மோதி விபத்துக்குள்ளானது. அதில் பயணம் செய்த 260 பேரும் உயிரிழந்தனர். அதற்குப் பிறகு நடந்த மிக மோசமான விமான விபத்து இதுவாகும்.