சிலை கடத்தல் விசாரணை கோப்புகள் காணாமல் போனது தொடர்பாக சம்மந்தப்பட்ட துறை செயலாளர் பிரமாண பத்திரம் தாக்கல் செய்ய அவகாசம் வழங்கி உச்சநீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
தமிழகத்தில் சிலை கடத்தல் விசாரணை கோப்புகள் திருடப்பட்ட விவகாரத்தில் சிறப்பு புனாய்வு அமைக்கக்கோரி பா.ஜ.க வழக்கறிஞர் யானை ராஜேந்திரன் தொடர்ந்த மேல்முறையீட்டு வழக்கு உச்சநீதிமன்ற நீதிபதி அபய்.எஸ்.ஓஹா தலைமையிலான அமர்வில் விசாரணைக்கு வந்தது.
அப்போது, தமிழக அரசு சார்பில் ஆஜரான வழக்கறிஞர் சபரீஷ் சுப்பிரமணியன், சிலை திருட்டு வழக்கு சம்மந்தப்பட்ட கோப்புகள் காணாமல் போன விவகாரத்தில் இரண்டாவது FIR பதியப்பட்டுள்ளதாகவும், உரிய விசாரணை நடைபெற்று வருவதாகவும் தெரிவித்தார்.
மேலும் இந்த விவகாரம் தொடர்பாக விளக்கம் அளிக்க தமிழ்நாடு உள்துறை செயலாளர் காணொளி மூலம் ஆஜராகியுள்ளதாகவும் கூறினார். அப்போது, இரண்டாவது FIR தாக்கல் செய்யப்பட்டுள்ளது என்பதை ஏற்க முடியாது என கூறிய நீதிபதிகள்,
சிலை கடத்தல் விசாரணை கோப்புகள் காணாமல் போனது தொடர்பாக சம்மந்தப்பட்ட துறை செயலாளர் பிரமாண பத்திரம் தாக்கல் செய்ய அவகாசம் வழங்கினர்.
அதேவேளையில், இந்த வழக்கின் மனுதரரான யானை ராஜேந்திரன் ஆஜராகி, தன்னுடைய வழக்கறிஞர் வாதிட இயலாததால், வழக்கில் வேறு ஒருவரை நியமிக்கும் வகையில் வக்காலத்து மாற்றம் செய்ய 4 வாரம் கால அவகாசம் கோரினார்.
அந்த கோரிக்கையை ஏற்று கால அவகாசம் வழங்கி நீதிபதிகள், வழக்கை பிப்ரவரி இறுதி வாரத்துக்கு ஒத்திவைத்தனர்.