குற்றப்பத்திரிகை தாக்கல் செய்வதில் போலீசார் காலதாமதம் செய்வதாக தொடரப்பட்ட வழக்கில் தமிழக அரசின் உள்துறை செயலாளர் தீரஜ்குமார் சென்னை உயர்நீதிமன்றத்தில் ஆஜரானார்.
சென்னை விருகம்பாக்கத்தை சேர்ந்த சுந்தர் என்பவர் தனக்கு கொலை மிரட்டல் விடுக்கப்பட்ட வழக்கில் குற்றப்பத்திரிகை தாக்கல் செய்ய காவல்துறைக்கு உத்தரவிடக்கோரி சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தார்.
இந்த மனுவை விசாரித்த சென்னை உயர்நீதிமன்றம், உள்துறை செயலாளர் நேரில் ஆஜராகி விளக்கமளிக்க வேண்டும் என உத்தரவிட்டது. உள்துறை செயலாளர் மாலை 4.30 மணிக்குள் நேரில் ஆஜராகாவிட்டால், பிடி வாரண்ட் பிறப்பிக்க நேரிடும் என்றும் சென்னை உயர்நீதிமன்றம் எச்சரிக்கை விடுத்தது.
இந்த நிலையில், உள்துறை செயலாளர் நேரில் ஆஜராக வேண்டும் என்ற உயர்நீதிமன்ற உத்தரவை ரத்து செய்யக்கோரி தமிழக அரசு உச்சநீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்தது.
இந்த மேல்முறையீட்டு மனுவை விசாரித்த உச்சநீதிமன்றம், தமிழக அரசின் கோரிக்கையை நிராகரித்து மனுவை தள்ளுபடி செய்தது. மேல்முறையீட்டு மனுவை உச்சநீதிமன்றம் தள்ளுபடி செய்ததை அடுத்து உள்துறை செயலாளர் தீரஜ்குமார் சென்னை உயர்நீதிமன்றத்தில் ஆஜரானார்.
அப்போது நீண்ட நாட்களாக நிலுவையில் இருக்கும் வழக்குகளில் விரைந்து குற்றப்பத்திரிகை தாக்கல் செய்ய நடவடிக்கை எடுக்குமாறு உள்துறை செயலாளரிடம் நீதிபதி அறிவுறுத்தினார். உள்துறை செயலாளரை நேரில் வரவழைப்பது நீதிமன்றத்தில் நோக்கமல்ல என தெரிவித்த நீதிபதி, காவல்துறையில் என்ன நடக்கிறது என்பதை தெரியப்படுத்துவதற்காகவே உள்துறை செயலாளரை நேரில் ஆஜராக உத்தரவிட்டதாக தெரிவித்தார்.