சென்னை ஓஎம்ஆர் சாலையில், அதிவேகமாக சென்ற கல்லூரிப் பேருந்து, இருசக்கர வாகனங்களின் மீது மோதிய விபத்தில், சம்பவ இடத்திலேயே பெண் உயிரிழந்தார்.
செங்கல்பட்டு மாவட்டம் திருப்போரூர் அருகே உள்ள ஸ்ரீசத்யா சாய் மருத்துவ கல்லூரிக்கு சொந்தமான பேருந்து ஓஎம்ஆர் சாலையில் சென்று கொண்டிருந்தது. குறிப்பிட்ட சாலை சந்திப்பு அருகே செல்லும் போது கட்டுப்பாட்டை இழந்த கல்லூரி பேருந்து, இருசக்கர வாகனங்களின் மீது மோதியது. அப்போது இருசக்கர வாகனங்களில் பயணித்தவர்கள் தூக்கி வீசப்பட்டனர்.
இந்தக் கோர விபத்தில் இருசக்கர வாகனத்தில் சென்ற காரப்பாக்கம் காந்தி நகர் பகுதியைச் சேர்ந்த ராதா என்ற பெண் சம்பவ இடத்திலேயே பலியானார். அதே பகுதியில் உள்ள ஐடி நிறுவனத்தில் பணியாற்றும் 2 பெண்கள் மற்றும் 2 ஆண்கள் படுகாயங்களுடன் மருத்துவமனையில் சேர்க்கப்பட்டனர்.
சம்பவம் குறித்து வழக்குப்பதிவு செய்த போலீசார், கல்லூரி பேருந்து ஓட்டுநரை கைது செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.