சீனாவைச் சேர்ந்த ஒரு தனியார் நிறுவன உரிமையாளர் தனது பணியாளர்களுக்கு கை நிறைய பணத்தை போனஸாக வழங்கி வாய் பிளக்க வைத்துள்ளார். இது பற்றிய ஒரு செய்தித் தொகுப்பை தற்போது காணலாம்.
ஒரு நீளமான மேஜை முழுவதும் கோடிக்கணக்கில் பணத்தை கொட்டி வைத்துவிட்டு, இதிலிருந்து எவ்வளவு பணம் வேண்டுமானாலும் எண்ணி எடுத்துக்கொள்ளலாம் என்று கூறினால் உங்கள் மனநிலை என்னவாக இருக்கும்? யூகிக்க முடியவில்லை அல்லவா? ஆனால், சீனாவைச் சேர்ந்த ஒரு தனியார் நிறுவனம் புத்தாண்டு போன்ஸ் வழங்குவதற்காக, தங்கள் ஊழியர்களுக்கு இப்படிப்பட்ட ஒரு Chance-ஐ உருவாக்கிக் கொடுத்து, அவர்களை மகிழ்ச்சியில் மூழ்கடித்துள்ளது.
ஒருசில நிறுவனங்கள் தங்கள் வளர்ச்சிக்காக ஆண்டு முழுவதும் உழைக்கும் ஊழியர்களை மகிழ்விக்க, எந்த உச்சத்திற்கும் செல்வார்கள் என்பதை இதுபோன்ற நிகழ்வுகளே நமக்கு உணர்த்துகின்றன. அந்த வகையில், கிரேன் தயாரிப்பில் ஈடுபட்டு வரும் சீனாவைச் சேர்ந்த Henan Mining Crane Co நிறுவனம், புத்தாண்டை முன்னிட்டு தனது ஊழியர்களுக்கு போனஸ் வழங்க முடிவு செய்தது.
அதற்காக அவர்களுக்கு சிறப்பு விருந்துக்கு ஏற்பாடு செய்த அந்நிறுவன நிர்வாகம், அங்கிருந்த ஒரு நீள மேஜையில் கோடிக்கணக்கான பணத்தை கொட்டி வைத்து, 15 நிமிடங்களுக்குள் அதிலிருந்து எவ்வளவு பணம் வேண்டுமானாலும், ஆண்டு போனஸாக எண்ணி எடுத்துச் செல்லலாம் என அறிவித்தது.
நிறுவனத்தின் இந்த அறிவிப்பை கேட்டு குஷியான ஊழியர்கள் மேஜையை சூழ்ந்து நின்று, கைக்கு கிடைத்த பணத்தை எண்ணி எடுத்து ஆண்டு போனஸாக எடுத்துச் சென்றனர். அதிகபட்சமாக ஒரு ஊழியர், ஒரு லட்சம் யுவான், இந்திய மதிப்பில் 12 லட்சம் ரூபாய் வரை எண்ணி எடுத்துச் சென்றதாக சீன செய்தி நிறுவனங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.
இது தொடர்பான வீடியோக்கள் இன்ஸ்டா உள்ளிட்ட சமூக வலைதளங்களில் வைரலாகி வரும் நிலையில், தங்கள் ஆச்சரியம் மற்றும் நகைச்சுவை உணர்வுகளை வெளிப்படுத்தும் விதமாக மக்கள் கருத்துக்களை பகிர்ந்து வருகின்றனர்.