“வளர்ச்சியடைந்த பாரதம் 2047” என்ற லட்சியத்தை எட்டுவதற்கான ஒரு உறுதியான பாதையை வகுக்கும் வகையில் 2025-26-ம் ஆண்டுக்கான மத்திய பட்ஜெட் அமைந்துள்ளதாக தமிழக ஆளுநர் ஆர்.என்.ரவி தெரிவித்துள்ளார்.
பட்ஜெட் தொடர்பாக தமிழ்நாடு ராஜ்பவன் எக்ஸ் தள பக்கத்தில் வெளியிடப்பட்டுள்ள அறிக்கையில், அசாதாரணமான, வரலாற்று சிறப்புமிக்க, அனைத்தையும் உள்ளடக்கிய பட்ஜெட்டை வழங்கிய பிரதமர் நரேந்திர மோடிக்கு நன்றி தெரிவித்துக்கொள்வதாக ஆளுநர் ஆர்.என்.ரவி கூறியுள்ளார்.
இந்த பட்ஜெட், அனைவருடனும், அனைவரின் நலனுக்காகவும் என்ற உணர்வை பிரதிபலிக்கும் வகையிலும், ஒவ்வொரு குடிமகனை வளப்படுத்தி அவர்களுக்கு தரமான சுகாதாரம் மற்றும் கல்விக்கான அணுகுதலை விரிவுபடுத்தும் வகையிலும்,
வளர்ச்சியடைந்த பாரதம் 2047 என்ற லட்சியத்தை எட்டுவதற்கான ஒரு உறுதியான பாதையை வகுக்கும் வகையிலும் அமைந்துள்ளதாக அவர் குறிப்பிட்டுள்ளார்.
ஏழைகள், விவசாயிகள், இளைஞர்கள் மற்றும் பெண்களுக்கு முன்னுரிமை அளிப்பதன் மூலம் இந்த பட்ஜெட், குறு, சிறு, நடுத்தர நிறுவனங்கள் துறையை வலுப்படுத்துவதுடன் நமது மக்களின் தொழில்முனைவு ஆற்றலையும் வெளிப்படுத்துவதாக கூறியுள்ள அவர்,
இந்த பட்ஜெட் வேலைவாய்ப்புகளை உருவாக்குவது, தொழில்முனைவோரை வளர்ப்பது, ஜவுளி மற்றும் மீன்வளத் துறைகள் உள்பட நிலையான விரிவான வளர்ச்சியை இயக்குவதை நோக்கமாகக் கொண்டுள்ளதாகவும் ஆளுநர் ரவி கருத்து தெரிவித்துள்ளார்.
அதேபோல, புதுமை, தொழில்நுட்பம், இணைப்பு மற்றும் டிஜிட்டல் உள்கட்டமைப்புகளுக்கு இந்த பட்ஜெட் வலுவான முக்கியத்துவத்தை அளிப்பதாக தெரிவித்துள்ளர் ஆளுநர் ஆர்.என்.ரவி,
கிராமப்புற-நகர்ப்புற பிளவுகளை இணைத்து, எந்த குடிமகனும் பின்தங்கியிருக்கவில்லை என்பதையும் இந்த பட்ஜெட் உறுதி செய்வதாக கூறியுள்ளார்.