மத்திய பட்ஜெட்டில் ஆண்டுக்கு 12 லட்சம் வரை வருமானம் ஈட்டுவோருக்கு வருமான வரி விலக்கு அளித்திருப்பதை உளமார வரவேற்பதாக தவெக தலைவர் விஜய் கருத்து தெரிவித்துள்ளார்.
இது குறித்து அவர் வெளியிட்டுள்ள எக்ஸ் தள பதிவில், தமிழகத்திற்கு புதிய திட்டங்களை அறிவிக்காமலும், போதிய நிதி ஒதுக்கீடு செய்யாமலும் மத்திய அரசு புறக்கணித்துள்ளதாக தெரிவித்துள்ளார்.
2025-26-ம் ஆண்டுக்கான மத்திய பட்ஜெட்டில் வரவேற்கத்தக்க சிறப்பம்சங்கள் ஒருசில மட்டுமே இடம்பெற்றுள்ளதாக குறிப்பிட்டுள்ள அவர்,
ஆண்டுக்கு 12 லட்சம் வரை வருமானம் ஈட்டுவோருக்கு வருமான வரி விலக்கு அளித்திருப்பதை உளமார வரவேற்பதாக தெரிவித்துள்ளார்.
இதன் மூலம், நடுத்தர மக்களுக்கு குறிப்பிடும்படியான நிவாரணம் கிடைத்திருப்பது மகிழ்ச்சி அளிப்பதாகவும், அதே சமயம் நாட்டில் பெரும்பான்மையாக இருக்கும் ஏழை எளிய மக்களுக்கு நிவாரணம் அளிக்கக்கூடிய பெட்ரோல்/டீசல் வரிக்குறைப்பு மற்றும் ஜிஎஸ்டி வரிக்குறைப்பு அல்லது எளிமைப்படுத்துதல் பற்றி எந்த ஓர் அறிவிப்பும் இல்லாதது பெரும் ஏமாற்றம் அளிப்பதாகவும் தவெக தலைவர் விஜய் கருத்து தெரிவித்துள்ளார்.