வருமான வரி உச்ச வரம்பு 12 லட்சம் ரூபாயாக உயர்த்தப்பட்டதும், மருந்துகள் மீதான வரி குறைப்பும் வரவேற்கத்தக்கது என பாமக நிறுவனர் ராமதாஸ் தெரிவித்துள்ளார்.
இதுதொடர்பாக எக்ஸ் தளத்தில் பதிவிட்டுள்ள அவர், 12 லட்சம் ரூபாய் வரை ஆண்டு வருமானம் ஈட்டுபவர்கள் வரி செலுத்தத் தேவையில்லை என்று நிதிநிலை அறிக்கையில் அறிவிக்கப்பட்டிருப்பது மகிழ்ச்சியளிப்பதாக தெரிவித்துள்ளார்.
36 வகையான உயிர்காக்கும் மருந்துகளுக்கு சுங்கவரி முற்றிலுமாக ரத்து செய்யப்பட்டிருப்பதும், அனைத்து மாவட்டங்களிலும் புற்றுநோய் சிகிச்சை மையம் அமைக்கப்படும் என்று அறிவிக்கப்பட்டிருப்பதும் வரவேற்கத்தக்கது என கூறியுள்ளார்.
வேளாண் விளைபொருட்களுக்கு குறைந்தபட்ச ஆதரவு விலை வழங்கப்படுவதை உறுதி செய்யும் வகையில் சட்டம் கொண்டு வரப்பட வேண்டும் என்றும் ராமதாஸ் வலியுறுத்தியுள்ளார்.