சங்கரன்கோவில் அருகே பணம் கொடுக்கல் வாங்கல் தகராறில் இளைஞர் கத்தியால் தாக்கப்பட்ட சம்பவத்தின் சிசிடிவி காட்சிகள் வெளியாகி உள்ளன.
தென்காசி மாவட்டம், சங்கரன்கோவில் பகுதியைச் சேர்ந்த கருப்பசாமி என்பவர் வட்டிக்கு பணம் கொடுக்கும் தொழில் செய்து வந்துள்ளார். கருப்பசாமியிடம் இருந்து ராமசாமி என்பவர் வட்டிக்கு பணம் வாங்கியதாக கூறப்படுகிறது.
இருவருக்கும் பணம் கொடுக்கல் வாங்கல் தகராறு இருந்து வந்த நிலையில், ராமசாமியின் வீட்டிற்கு சென்று பணம் கேட்டு கருப்பசாமியின் மகன் மகேந்திரன் தகராறில் ஈடுபட்டுள்ளார். இதனை தொடர்ந்து சங்கரன்கோவில் – ராஜபாளையம் சாலையில் நின்று கொண்டிருந்த மகேந்திரனிடம், ராமசாமியின் மகன் சரவணன் வாக்குவாதத்தில் ஈடுபட்டுள்ளார்.
அப்போது, இருவருக்கும் ஏற்பட்ட தகராறில், சரவணன் தான் மறைத்து வைத்திருந்த கத்தியால் மகேந்திரனை கடுமையாக தாக்கியுள்ளார். படுகாயமடைந்த மகேந்திரன் நெல்லை அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வரும் நிலையில், தப்பியோடிய சரவணனை போலீசார் கைது செய்து விசாரணை மேற்கொண்டனர். இந்நிலையில், இளைஞர் கத்தியால் தாக்கப்பட்ட சம்பவத்தின் சிசிடிவி காட்சிகள் வெளியாகி உள்ளன.