சீனாவின் DeepSeek AI அறிமுகமானதைத் தொடர்ந்து, APPLE APP STORE லும், GOOGLE PLAY STORE லும் மிக அதிகமாக பதிவிறக்கம் செய்யப்பட்ட செயலியாக சாதனை படைத்துள்ளது. இதன் மூலம், 140 சந்தைகளில் அதிகம் பதிவிறக்கம் செய்யப்பட்ட மொபைல் செயலியாக சாதனை படைத்துள்ளது. கூடவே இரண்டு நாடுகளில் தடையும் செய்யப்பட்டுள்ளது. அது பற்றிய ஒரு செய்தி தொகுப்பு.
சீனாவில் உருவாக்கப் பட்ட செயற்கை நுண்ணறிவு செயலியான DeepSeek கடந்த வாரம் அமெரிக்காவில் வெளியிடப்பட்டது. AI தொழில்நுட்ப துறையில் DeepSeek உலக நாடுகளை அதிர்ச்சி அடைய வைத்துள்ளது. அமெரிக்க பங்குச் சந்தை வரலாறு காணாத வீழ்ச்சியைச் சந்தித்தது.
குறிப்பாக, இணைய தொழில்நுட்பங்களுக்கான நாஸ்டாக் பங்குச் சந்தை 3 சதவீதம் வீழ்ச்சியடைந்தது. உலகின் முதல் பத்து செமி கண்டக்டர் நிறுவனங்களின் பங்குகள் கடுமையாக சரிந்தன.
செயற்கை நுண்ணறிவை இயக்கும் சக்திவாய்ந்த செமி கண்டக்டர் CHIP களை உருவாக்கி வரும் என்விடியா நிறுவனம், மிக மோசமாக பாதிப்பைச் சந்தித்தது. என்விடியா பங்கு விலை ஒரே நாளில் 17 சதவீதம் சரிந்தது. 600 பில்லியன் அமெரிக்க டாலர் டாலர் சந்தை மதிப்பை என்விடியா ஒரே நாளில் இழந்தது என்பது குறிப்பிடத்தக்கது.
அமெரிக்க அதிபர் ட்ரம்ப், DeepSeek ஏஐ தொழில்நுட்பத்தின் அசுர வளர்ச்சி, அமெரிக்க தொழில்துறைக்கு ஒரு எச்சரிக்கை மணி எனக் குறிப்பிட்டிருந்தார்.
ஏழே நாட்களில், DeepSeek அமெரிக்காவில் ஆப்பிள் APP ஸ்டோரில் மிக அதிகமாக பதிவிறக்கம் செய்யப்பட்ட செயலியாக மாறியுள்ளது. மேலும், GOOGLE PLAY STORE லும் மிக அதிகமாக பதிவிறக்கம் செய்யப்பட்ட செயலியாகவும் DeepSeek சாதனை படைத்துள்ளது.
18 நாட்களுக்குள், DeepSeek செயலி 16 மில்லியன் பதிவிறக்கங்களுடன் முதல் இடத்தைப் பிடித்துள்ளது. வெளியீட்டு காலத்தில் OpenAI இன் ChatGPT அடைந்த ஒன்பது மில்லியன் பதிவிறக்கங்களை விட கிட்டத்தட்ட இரு மடங்காகும்.மேலும், அனைத்து DeepSeek பதிவிறக்கங்களிலும் இந்தியா 15.6 சதவீதத்தைக் கொண்டுள்ளது.
ChatGPT உட்பட பிற AI செயலிகளின் புதிய பதிப்புக்களைப் பயன்படுத்த கட்டணம் செலுத்த வேண்டும். ஆனால், DeepSeekAI முழுவதும் இலவசமாக கிடைக்கிறது. இதன் காரணமாகவே, DeepSeekAI AI சந்தையைத் தன்வசமாக்கி உள்ளது.
OpenAI நிறுவனம், 100 மில்லியன் அமெரிக்க டாலர் செலவில் ChatGPT யை உருவாக்கியுள்ளது. ஆனால், Deepseek நிறுவனமோ அதன் AI மென்பொருளைத் தயாரிக்க வெறும் 6 மில்லியன் அமெரிக்க டாலரையே செலவிட்டுள்ளது.
இதற்கிடையே, அமெரிக்க நாடாளுமன்ற அலுவலகத்தில் யாரும், DeepSeek செயலியை , தங்கள் தொலைபேசியிலோ, கணினியிலோ பதிவிறக்கம் செய்யவோ,பயன்படுத்தவோ தடை விதிக்கப்பட்டுள்ளது. மேலும், அமெரிக்கா கடற்படை தனது வீரர்கள், DeepSeek செயலியைப் பயன்படுத்துவதை முற்றிலுமாக தடை செய்துள்ளது.
மேலும், DeepSeek செயலியை இத்தாலி மற்றும் அயர்லாந்து ஆகிய நாடுகள் தடை விதித்துள்ளன. இரு நாடுகளும், ஐரோப்பிய யூனியன் தரவு பாதுகாப்பு விதிமுறைகளை DeepSeek பின்பற்றுகிறதா என்பது குறித்து விசாரணையைத் தொடங்கியுள்ளது.
இந்தச் சூழலில், தரவு பாதுகாப்பை மேம்படுத்துவதையும், நாட்டின் விதிமுறைகளை Deep Seek பின்பற்றுவதை உறுதி செய்வதையும் அரசு நோக்கமாகக் கொண்டுள்ளது என்று மத்திய அமைச்சர் அஸ்வினி வைஷ்ணவ் தெரிவித்துள்ளார்.
மேலும் உள்நாட்டு GPU-க்களை உருவாக்க இந்தியாவுடன் இணைந்து பணியாற்ற முக்கிய செமி கண்டக்டர் நிறுவனங்கள் ஆய்வு செய்து வருகின்றன என்றும் கூறியிருந்தார்.
இந்தியா ஏஐ மிஷன் என்று திட்டத்துக்காக 10,300 கோடி ரூபாய்க்கும் அதிகமான நிதியை மத்திய அரசு ஒதுக்கீடு செய்துள்ளது குறிப்பிடத்தக்கது.