காஞ்சிபுரம் உலகளந்த பெருமாள் கோயிலில் பிரம்மோற்சவ திருவிழாவையொட்டி இரவு யாளி வாகனத்தில் பெருமாள் வீதி உலா வந்து பக்தர்களுக்கு அருள்பாலித்தார்.
நான்கு திவ்ய தேசங்களை கொண்ட ஒரே கோயிலான காஞ்சிபுரம் உலகளந்த பெருமாள் கோயிலில் ஆண்டுதோறும் தை மாதத்தில் பிரம்மோற்சவ விழா கோலாகமாக நடைபெற்று வருகிறது. அந்த வகையில், நடப்பாண்டுக்கான பிரம்மோற்சவ விழா வெகு விமரிசையாக தொடங்கியது.
பிரம்மோற்சவம் விழாவின் முதல் நாளில் யாளி வாகனத்தில் நின்ற கோலத்தில் உலகளந்த பெருமாள் எழுந்தருளி பக்தர்களுக்கு காட்சியளித்தார். பெருமாளுக்கு திருவாபரணங்கள் சூடி, கிரீடம் தரித்து, பலவண்ண மலர்களை கொண்டு தொடுத்த மாலை அணிவித்து ரம்மியமாக காட்சி அளித்தார்.
கோயிலில் இருந்து புறப்பட்ட வீதி உலா நான்கு ராஜ வீதிகளில் வலம் வந்து மீண்டும் வாகன மண்டபத்திற்கு சென்றடைந்தது. இந்த நிகழ்வில் ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர்.