மகா கும்பமேளா கூட்ட நெரிசலில் சிக்கி 30 பேர் உயிரிழந்த சம்பவம் தொடர்பாக 16 ஆயிரம் செல்போன் எண்களின் தரவுகளை போலீசார் ஆய்வு செய்து விசாரித்து வருகின்றனர்.
உத்தரப்பிரதேச மாநிலம் பிரயாக்ராஜில் மகா கும்பமேளா நடைபெற்று வருகிறது. இதில், கடந்த 29-ம் தேதி திரிவேணி சங்கமத்தில் ஏற்பட்ட கூட்ட நெரிசலில் சிக்கி 30 பேர் உயிரிழந்தனர்.
சிலர் வேண்டுமென்றே கூட்டத்தில் முண்டியடித்துக் கொண்டு பக்தர்களை தள்ளியதால் இந்த அசம்பாவிதம் ஏற்பட்டதாக கூறப்படுகிறது. இதனால், 30 பேர் உயிரிழந்த சம்பவத்தில் சதி திட்டம் இருக்குமா? என்ற கோணத்தில் போலீசார் விசாரணையை தொடங்கியுள்ளனர்.
அதன்படி, சம்பவம் நிகழ்ந்தபோது திரிவேணி சங்கமத்தில் இருந்த 16 ஆயிரம் செல்போன் எண்களின் தரவுகளை ஆய்வு செய்து வருகின்றனர். இதில், பலரது செல்போன் எண்கள் தற்போது அணைத்து வைக்கப்பட்டுள்ளதாக தெரிகிறது. அத்துடன், சிசிடிவி காட்சிகளை ஆய்வு செய்தும் போலீசார் விசாரித்து வருகின்றனர்.