புதுக்கோட்டை மாவட்டம் ஆலங்குடி பகுதியில் வசிக்கும் ஆதரவற்றோருக்கு ஒரு துன்பம் என்றால் கூப்பிட்ட உடன் ஓடோடி உதவி செய்யும் 515 கணேசனை தெரியாதவர்களே இல்லை என்று சொல்லலாம்…. யார் இந்த 515 கணேசன்… பார்க்கலாம் இந்த செய்தித்தொகுப்பில்.
ஆலங்குடியில் எளிமையாக வசித்து வரும் கணேசன் என்பவர் மற்றவர்களுக்கு உதவி செய்வதை தலையாய கடமையாக கொண்டவர். 76 வயதிலும் துடிப்போடு சமூக சேவை ஆற்றி வரும் இவரை, கணேசன் என்று சொல்வதை விட 515 கணேசன் என்றே மக்கள் அன்போடு அழைக்கின்றனர்.
காரணம் உதவி செய்ய வேண்டும் என்ற நோக்கத்தில் வீட்டில் இருந்த பொருட்களை எல்லாம் விற்று அவர் வாங்கிய அம்பாசிடர் காரின் பதிவெண் அது. காலப்போக்கில் அதுவே அவரது அடையாளமாக மாறிப்போனது.
ஆதரவற்றோருக்கு ஒரு துயரம் என்றால் 515 கணேசனால் சிறிதும் தாங்கிக்கொள்ள முடியாது. அவர்கள் உயிர் வாழும் போது தேவைப்படும் உதவி முதல் இறந்த பின்னர் உடலை நல்லடக்கம் செய்வது வரை அனைத்து வேலைகளையும் கூட நின்று செய்வார்.
56 ஆண்டுகளாக இந்த தலைசிறந்த சேவையாற்றி வரும் 515 கணேசன், தனது அம்பாஸிடர் காரிலியே உடலை கொண்டு சென்று நல்லடக்கம் செய்யும் பணியை மேற்கொள்வார். ஆரம்பகாலத்தில் அவரை ஏளனமாக பார்த்த சமூகத்தில், கொரானா காலத்திற்கு பிறகு புகழ் வெளிச்சம் கிடைத்ததோடு, தங்களது பெருமையே கணேசன் தான் என மார்தட்டி கூறுகின்றனர்.
பழைய இரும்பு வாங்கி விற்கும் தொழில் செய்து அதில் கிடைக்கும் 500, 1000 ரூபாய் வருவாய் டீசல் செலவுக்கே போதவில்லை என்று புன்னகையுடன் கூறுகிறார் 515 கணேசன். 76 வயதிலும் ஓய்வின்றி பம்பரமாக சுழன்று சேவையாற்றும் கணேசனின் சுறுசுறுப்பிற்கு காரணம் கேட்டால், எல்லாம் நான் செய்த புண்ணியம் தான் என்று கூலாக பதில் சொல்கிறார்.
உதவும் எண்ணம் கொண்ட கணேசன் ஏழ்மையில் வாடுவதை கண்டு வேதனையடைந்த நடிகர் ராகவா லாரன்ஸ் தனது சொந்த செலவில் ஆலங்குடி பகுதியிலேயே வீடு ஒன்றைக் கட்டித் தந்து உதவி இருக்கிறார். அந்த வீட்டில் தான் தற்போது கணேசனின் குடும்பத்தினர் வசித்து வருகின்றனர். கர்நாடகா பல்கலைக்கழகம் இவருக்கு டாக்டர் பட்டம் வழங்கி கௌரவித்திருக்கும் நிலையில், அது தவிர 200-க்கும் மேற்பட்ட விருதுகளையும் வாங்கி குவித்திருக்கிறார் கணேசன்.
ஓட்டை உடைசலாக காணப்படும் காரில்தான் தன்னுடைய சேவை பணியை மேற்கொள்வதாக கூறும் 515 கணேசன், அதனை சரி செய்ய யாராவது உதவினால் ஏற்றுக்கொள்வேன்…. மாறாக நானாக யாரிடமும் உதவி கேட்க மாட்டேன் எனக் கூறுகிறார்.
பிறருக்காக இரக்கப்படும் சுபாவம், மற்றவர்களுக்கு உதவும் மனப்பான்மை மனிதர்களுக்கு அமைவது மாபெரும் வரம். அந்த வரம் பெற்று வாழும் 515 கணேசன் மற்றவர்களுக்கு கிடைத்த வரம் என்றால் மிகையில்லை.