திருப்பூரில் 11 நாட்களாக நடைபெற்ற புத்தகத் திருவிழாவை ஒரு லட்சத்திற்கும் மேற்பட்ட பார்வையாளர்கள் கண்டு களித்ததாக பொறுப்பாளர்கள் தெரிவித்துள்ளனர்.
திருப்பூர் மாவட்ட நிர்வாகம் மற்றும் பின்னல் புக் ட்ரஸ்ட் சார்பில் 21வது புத்தக திருவிழா கடந்த 23ஆம் தேதி தொடங்கியது.
திருப்பூர் – காங்கேயம் சாலையில் உள்ள தனியார் மைதானத்தில் நடைபெற்ற புத்தக திருவிழாவை அமைச்சர்கள் சாமிநாதன், கயல்விழி செல்வராஜ் ஆகியோர் தொடங்கி வைத்தனர்.
150 அரங்குகளில் பல்வேறு பதிப்பகங்களின் சார்பில் லட்சக்கணக்கான புத்தகங்கள் வைக்கப்பட்டிருந்த நிலையில், நாள்தோறும் ஆயிரக்கணக்கானோர் வந்து தங்களுக்கு தேவையான புத்தகங்களை வாங்கிச் சென்றனர்.
11 நாட்களாக நடைபெற்ற புத்தக திருவிழாவில் ஒரு லட்சத்துக்கும் மேற்பட்ட பார்வையாளர்கள் கலந்து கொண்டு புத்தகங்களை வாங்கி சென்றதாகவும், நிறைவு நாளில் மட்டும் 20 ஆயிரத்துக்கும் மேற்பட்டோர் புத்தகத் திருவிழாவை கண்டு களித்ததாகவும் பொறுப்பாளர்கள் தெரிவித்தனர். மேலும், புத்தகத் திருவிழாவில் 1 கோடி ரூபாய்க்கு மேல் புத்தகங்கள் விற்பனையானதாகவும் கூறியுள்ளனர்.