குஜராத் மாநிலம் சூரத் அருகே, திருமணத்தின்போது உணவு இல்லாததால் மணப்பெண் வீட்டார் திருமணத்தை நிறுத்தி வாக்குவாதத்தில் ஈடுபட்டனர்.
வரஷா பகுதியில் ராகுல் பிரமோத், அஞ்சலி குமாரி ஆகியோருக்கு நேற்று திருமணம் நடைபெற இருந்தது. திருமண மண்டபத்தில் இதற்கான ஏற்பாடுகள் செய்யப்பட்டிருந்தன. மண்டபத்தில் மணமகள் குடும்பத்தினர் சாப்பிடுவதற்குமுன் உணவு காலியாகிவிட்டது.
இதில் ஆத்திரமடைந்த மணமகள் வீட்டார், மாப்பிள்ளை வீட்டாரிடம் வாக்குவாதத்தில் ஈடுபட்டு, திருமணத்தை நிறுத்தி விட்டனர். இதனால் ஆத்திரமடைந்த மணமகன், காவல் நிலையத்திற்கு சென்று புகார் அளித்தார்.
இதையடுத்து மணமகளின் குடும்பத்தினரை அழைத்து போலீசார் விசாரணை நடத்தினர். இதில், இரு தரப்புக்கும் இடையே சமரசம் ஏற்பட்டது. அதைத்தொடர்ந்து காவல் நிலையத்திலேயே ராகுல்-அஞ்சலி ஜோடிக்கு திருமணம் நடைபெற்றது.